சென்னை: கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் பதிவிட்டுள்ள ட்வீட்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் 136 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 136 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. பாஜக இதுவரை 65 இடங்களில் வெற்று பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதனால், கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் கருத்து பதிவிட்டுள்ளார். காலையில் வாக்கு எண்ணிக்கை நடந்தபோதே “மதச்சார்பற்ற எண்ணங்கள் விழித்துக்கொண்டன. டைம் டூ லீட்” என பதிவிட்டவர், தேர்தல் முடிவுகள் வெளியான பின், “கர்நாடக தேர்தல் முடிவுகளை வட இந்தியாவில் பாதி பேர் அமைதியாகக் கொண்டாடி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் புதிய வாக்குறுதிகள் மற்றும் பல மெகா ஷோக்களால் வெடிக்கக் கூடும். ஆனால் மௌனத்தில் அவர்களின் எதிர்வினைகள் வெளிவரும். மதச்சார்பற்ற இதயம் வெறுப்பால் அல்ல அன்பால் நிறைந்துள்ளது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமின் இந்த ட்வீட்கள் வைரலாகி வருகிறது.