புதுடெல்லி,
ராகுலுக்கு தண்டனை விதித்த நீதிபதி உள்பட 68 நீதிபதிகள் பதவி உயர்வுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கை விசாரித்து அவர் குற்றவாளி என தீர்மானித்து, 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தவர், குஜராத் மாநிலத்தின் சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா ஆவார்.
இவர் உள்பட 68 நீதிபதிகளுக்கு மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பட்டியல் அளிக்க பட்டியல் தயாரானது.
இதை எதிர்த்து நீதிபதிகள் அந்தஸ்தில் குஜராத் மாநில அரசில் சட்டத்துறையில் சார்பு செயலாளராக உள்ள ரவிகுமார் மகேதாவும், மாநில சட்ட உதவி ஆணையத்தில் உதவி இயக்குனராக உள்ள சச்சின் பிரதாப்ராய் மேத்தாவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
68 நீதிபதிகள் பதவி உயர்வில் தகுதி மற்றும் பணிமூப்பு கொள்கை மீறப்பட்டுள்ளதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இதில் பதில் அளிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கும், குஜராத் ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரலுக்கும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 13-ந் தேதி நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கடந்த மாதம் 18-ந் தேதி குஜராத் மாநில அரசு 68 நீதிபதிகளுக்கும் பதவி உயர்வு அளித்து உத்தரவு பிறப்பித்தது.
பதவி உயர்வுக்கு தடை
இந்த நிலையில் 68 நீதிபதிகள் பதவி உயர்வை எதிர்க்கும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று வந்தபோது, 68 நீதிபதிகள் பதவி உயர்வுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
2011-ம் ஆண்டு திருத்தப்பட்ட குஜராத் மாநில நீதித்துறை பணி விதிகள்படி, பதவி உயர்வு என்பது தகுதி மற்றும் பணிமூப்பு கொள்கை மற்றும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுதல் அடிப்படையில் செய்யப்படவேண்டும். ஆனால், 68 நீதிபதிகள் பதவி உயர்வில் தகுதி மற்றும் பணி மூப்பு கொள்கை மீறப்பட்டுள்ளது.
ஐகோர்ட்டினால் வழங்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலும், நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கி, மாநில அரசு பிறப்பித்த உத்தரவும் சட்ட விரோதமானவை. எனவே இந்தப் பதவி உயர்வு, நிலைத்து நிற்கத்தக்கது அல்ல. இதில் நாங்கள் திருப்தி அடைகிறோம்.
எனவே பதவி உயர்வு பட்டியலை செயல்படுத்தாமல் தடை விதிக்கிறோம். பதவி உயர்வு பெற்றவர்கள், பதவி உயர்வுக்கு முன் அவர்கள் வகித்து வந்த அசல் பதவிக்கு அனுப்பப்படுவார்கள்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறி உள்ளனர்.
இந்த உத்தரவைப் பிறப்பித்த 2 நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி எம்.ஆர்.ஷா வரும் 15-ந் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே புதிய அமர்வு தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.