ராகுல் காந்தியின் அத்தியாயம் கர்நாடகாவிலிருந்து ஆரம்பம்! பாஜகவுக்கு இது ஒரு பாடம்! -துரை வைகோ

சென்னை: ராகுல் காந்தியின் அத்தியாயம் கர்நாடகாவிலிருந்து தொடங்கியுள்ளதாக மதிமுக தலைமைக்கழகச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு இது ஒரு பாடம் என கர்நாடக தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

நடைபெற்று முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. நாடு முழுவதும் மத அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்த நினைக்கும் ஆளும் பாஜக அரசுக்கு கர்நாடகா மாநிலத்தில் கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது.

கர்நாடகா மாநிலத்தில் பாஜகவின் மிக மோசமான ஆட்சிக்கு மக்கள் முற்றுப் புள்ளி வைத்துள்ளார்கள். குறிப்பாக, கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லீம்களுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சமீபத்தில் பாஜக அரசு ரத்து செய்து, பெரும்பான்மை சமூகங்களான வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்து பிரிவினர்களுக்கு அந்த ஒதுக்கீட்டை தலா 2 விழுக்காடாக பிரித்து கொடுத்தது.

அந்த சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு தருவதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், பெரும்பான்மை சமூகங்களுக்கு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை பிடுங்கி கொடுப்பதன்மூலம், வாக்கு வங்கி அரசியலை தக்க வைக்கவும், ஊழல் அரசை தொடரவும் முயற்சி செய்த பாஜக அரசின் நடவடிக்கையை தான் நாம் கண்டிக்கிறோம்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, சாதி மத ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்தும் பஜ்ரங்தள் அமைப்பை தடைசெய்வோம் என காங்கிஸ் அறிவித்தது. இதை கையில் எடுத்துக் கொண்டு காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான கட்சி என பாஜக பிரச்சாரம் செய்தது.

ஆனாலும் பாஜகவின் போலி பிரச்சாரம் எடுபடவில்லை. கர்நாடகாவில் பாஜக அரசை 40% கமிசன் அரசு என்று தான் எல்லோரும் அழைத்தார்கள். இந்தியாவிலேயே மிக மிக ஊழல் மலிந்த அரசாக கர்நாடகாவில் பாஜகவின் ஆட்சி இருந்து வந்தது. சர்வதேச அளவில் கர்நாடகா பாஜக அரசின் ஊழல் பேசப்பட்டது.

கர்நாடகா மாநிலத்தில் அதிகளவு கமிசன் கேட்டதால் அங்கே இரண்டு ஒப்பந்தக்காரர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். அதன் எதிரொலியாக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டில் உள்ள பாஜக தலைமை இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக தமிழக அரசை தொடர்ந்து குற்றம் சாட்டியது.

தமிழ்நாட்டில் குற்றங்கள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விடுகிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் தான் லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. அதற்கு நம் அண்டை மாநிலமான கர்நாடகா தான் சிறந்த உதாரணம் என, நானே பல இடங்களில் பேசியுள்ளேன்.

ஒன்றிய அரசின் பலம், கர்நாடகாவில் ஆளும் கட்சி என்ற நிலை, ஆட்சி அதிகாரம் பண பலம் இவை அனைத்தும் இருந்தும் பாஜகவிற்கு கர்நாடகா மக்கள் நல்ல பாடத்தை புகட்டியுள்ளார்கள்.

ஒற்றுமையை வலியுறுத்தி நாடுமுழுவதும் நடைபயணம் மேற்கொண்ட சகோதரர் ராகுல்காந்தி அவர்களின் பயணத்திற்கு கிடைத்த வெற்றி இது.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடகா தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கிறது. ராகுல் காந்தியின் அத்தியாயம் கர்நாடகத்தில் இருந்து தொடங்குகிறது..! அவருக்கு என் வாழ்த்துகள்!

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.