வைகோ: ‘இங்க பாருங்க கர்நாடகாவில ஃப்ரூப் பண்ணியாச்சு’.. ஸோ மாற்றம் வரும் நம்புங்க.!

கர்நாடகா தேர்தலில்

கட்சி வென்றதை அடுத்து வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த சூழலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 136 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி வெற்றி வாகை சூடியுள்ளது. ஆளும்கட்சியாக இருந்த பாஜக 65 தொகுதிகளில் வென்று எதிர்கட்சியாக மாறியுள்ளது. அதேபோல் கிங்மேக்கராக செயல்பட நினைத்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வென்றுள்ளது.

மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களில் வென்றால் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கு முடியும் என்ற சூழலில், காங்கிரஸ் கட்சி 42.88 சதவிகித வாக்குகளுடன் பெரும்பான்மைக்கும் கூடுதலான இடங்களை கைப்பற்றி உள்ளது. அதேபோல் பாஜக 36 சதவிகித வாக்குகளையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 13.29 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், 40 சதவிகித கமிசன், சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம், ஹிஜாப் விவகாரம் உள்ளிட்ட காரணிகள் பாஜகவிற்கு எதிராக வாக்களார்களை மடைமாற்றியதாக கூறப்படுகிறது. அதேபோல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3 ஆயிரம், டிப்ளோமா படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.1500, மகளிர்களுக்கான இலவச பேருந்து பயணம், 200 யுனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சியை கரைசேர்த்ததாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், ‘‘கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், பாஜக வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து எறிந்து இருக்கின்றது. 2018ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், கர்நாடக மக்கள் பாஜகவை வீழ்த்தினார்கள். மதசார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது.

ஆனால், பாஜக குதிரைப் பேரம் நடத்தி, சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆளுநர் துணையோடு குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. கர்நாடகத்தை காவிமயமாக்கும் நடவடிக்கையில் இறங்கிய ஆர்எஸ்எஸ் இந்துத்துவ சக்திகள், சிறுபான்மை இஸ்லாமியர், கிறிஸ்தவ மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டன.

இஸ்லாமிய மக்களின் பண்பாட்டு உரிமைகளைப் பறித்தன. இந்துவத்துவ சோதனைச் சாலையாக மாற்றப்பட்ட கர்நாடகாவில், முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்தது. பாஜகவின் ஏதேச்சாதிகார, மதவெறி அரசியலுக்கு கர்நாடக மக்கள் தக்கப் பாடம் புகட்டி இருக்கிறார்கள்.

இந்தியாவில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் இந்துவத்துவக் கும்பலை தேர்தல் களத்தில் வீழ்த்த முடியும் என்பதை கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெள்ளிடை மலையாக நிருபித்து இருக்கிறது. பாசிசத்தை வேரறுக்க கர்நாடகாவில் மக்கள் சக்தி வெகுண்டு எழுந்தது போல, 2024 நாடாளுமன்றத்தேர்தலிலும் இந்தியா முழுவதும் நடக்கும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.