ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்த கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி 137 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இது கருத்து கணிப்பையும் தாண்டிய எண்ணிக்கை.
கர்நாடகா தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு பாஜக வேட்பாளர்களின் செய்கைகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்து – முஸ்லிம் பிரிவினைவாத பேச்சு, முஸ்லிம் மீதான வன்முறை போக்கு, தீவிர வலதுசாரி பிரச்சாரங்கள் ஆகியவரை பாஜகவின் இப்பெரிய வீழ்ச்சிக்கு காரணம் எனலாம்.
கடந்தாண்டு உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்ததாக 6 இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை. இது மிகப்பெரிய போராட்டத்துக்கு வழி வகுத்தது. எனினும் இதில் தீவிரமாக இருந்த பாஜக அரசு மாணவர்கள் உரிய பள்ளி சீருடையில் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அப்போது மாநில கல்வி அமைச்சராக இருந்த பிசி நாகேஷ் ஹிஜாப் தடைக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
வீடியோவை காண:
‘அல்லாஹு அக்பர்’… காவி மிரட்டலுக்கு நடுவே கர்ஜனை … பதட்டத்தில் கர்நாடகா
அதுகுறித்து அவர் விளக்கம் அளித்தபோது, ‘ கல்வி வளாகத்திலும் ராணுவத்தில் பின்பற்றப்படும் சட்டங்கள் போலத்தான் பின்பற்றப்பட வேண்டும். அதை மீறுபவர்கள் அவர்களுக்கான வழியைப் பார்த்துக் கொள்ளலாம். பெண் பிள்ளைகள் பள்ளி வரையில் ஹிஜாப் அணிந்து வரலாம். ஆனால் கல்வி நிலையத்திற்குள் நுழைந்தவுடன் அதனை அகற்றி பையில் வைத்துக் கொள்ள வேண்டும்’ என கூறினார். தேசிய அளவில் வெடித்த இந்த பிரச்சினைக்கு பிசி நாகேஷ் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், நடந்து முடிந்துள்ள கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பிசி நாகேஷ் திப்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கே ஷடாக்ஷரி, ஜேடி(எஸ்) சார்பில் சாந்தகுமார் ஆகியோர் களமிறங்கினர். இதில், பிசி நாகேஷ் காங்கிரஸ் வேட்பாளர் ஷடாக்ஷரியிடம் 17, 662 வாக்கு வித்தியசத்தில் தோல்வியை தழுவியுள்ளார். இவரது தோல்விக்கு ஹிஜாப் பிரச்சினையும் முக்கிய காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில், கனகபுரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சுமார் 1.22 லட்சம் (75.03%) வாக்குகளைப் பெற்று இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக அமைச்சர் அசோக் உள்ளிட்ட 14 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.