ஹிஜாப் தடையின் ஹீரோ.. தேர்தலில் மண்ணை கவ்வினார்.. சம்பவம் செய்த கர்நாடக மக்கள்.!

கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை அறிவித்த பாஜக அமைச்சர் சொந்த தொகுதியில் தோல்வியை தழுவினார்.

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இது வரை 178 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி 108 இடங்களிலும், பாஜக 50 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 51 தொகுதிகளில் 33 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 14 இடங்களில் பாஜகவும், 4 இடங்களில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் முன்னிலையில் உள்ளன.

இதன்மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. 40 சதவிகித கமிசன், ஹிஜாப் விவகாரம், சிறுபான்மையினர் வெறுப்பு, விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட காரணிகள் பாஜகவிற்கு எதிராக திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஹிஜாப் விவகாரமும், சிறுபான்மையினர் வெறுப்பும் முஸ்லிம்கள் வாக்கை காங்கிரஸ் கட்சிக்கு மடைமாற்றியுள்ளது. இதில் ஹிஜாப் விவகாரம் தான் பல ஆயிரம் மாணவிகளின் கல்வியைப் பறித்தது.

மத அடையாளங்களை வெளிப்படுத்தும் உடைகளை கல்வி நிறுவனங்களில் அணியக் கூடாது என கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாஜக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் அறிவித்தார். அதைத் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து சென்ற இஸ்லாமிய மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. தேர்வு எழுத விடாமல் இஸ்லாமிய மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு பிறகு, இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்கள் காவித்துண்டுகளை அணிந்து கல்வி நிறுவனங்களுக்குச் சென்றனர்.

இந்து, முஸ்லிம் என இரு பிரிவினரிடையே மோதல் வெடித்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. அதையடுத்து உயர்நீதிமன்றத்தை நாடிய இஸ்லாமிய மாணவிகளுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. கல்வி நிறுவனங்களில் மத அடையாளம் இருக்க கூடாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பல ஆயிரம் இஸ்லாமிய மாணவிகள் படிப்பை தொடர முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இந்தசூழலில் தான் கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெரும் நிலையை அடைந்துள்ளது. இந்தநிலையில் கல்விநிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்ட பாஜக கல்வி அமைச்சர் பிசி நாகேஷ், இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். திப்தூர் தொகுதியில் போட்டியிட்ட பிசி நாகேஷ் 49 ஆயிரத்து 779 வாக்குகள் பெற்று, சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார். அதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சதக்‌ஷாரி 64 ஆயிரத்து 854 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.