1989ம் ஆண்டுக்கு பிறகு அதிக இடங்களை
காங்கிரஸ்
கட்சி கைப்பற்றியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. இது வரை வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிகள் அறிவிக்கப்பட்ட 220 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 133 இடங்களிலும், பாஜக 64 இடங்களிலும் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் மீதமுள்ள 4 தொகுதிகளில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையிலும், 1 தொகுதியில் பாஜக முன்னிலையிலும் உள்ளது.
மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களை வென்றாலே ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களை வெல்லும் நிலை உள்ளது. இதன் மூலம் 1989ம் ஆண்டிற்கு பிறகு அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி புதிய வரலாறு படைத்துள்ளது. கர்நாடகாவில் கடந்த 1952ம் ஆண்டு முதன் முதலாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.
1952ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 1989, 1999, 2013 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அரசாங்கத்தை அமைத்தன. ஆனால் அந்த அரசை கவிழ்த்து, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைத்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
மேற்கூறிய காங்கிரஸ் ஆட்சி அமைத்த ஆண்டுகளில் அக்கட்சி பல்வேறு தேர்தல்களில், பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளில் பெரு வெற்றி பெற்றுள்ளது. உதாரணமாக 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிகபட்சமாக 178 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் 1972 தேர்தலில் 165 தொகுதிகளையும், 1957 தேர்தலில் 150 இடங்களையும், 1978 தேர்தலில் 149 தொகுதிகளையும், 1962 தேர்தலில் 138 தொகுதிகளையும், 1999 தேர்தலில் 132 இடங்களையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.
இந்தசூழலில் கடந்த 1989ம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் புதிய வரலாற்றைப் பதிவு செய்துள்ளது. அதாவது ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை காட்டிலும் அதிக தொகுதிகளை 1989க்கு பிறகு காங்கிரஸ் இந்த தேர்தலில் கைப்பற்றியுள்ளது. 1994ல் 34 இடங்கள், 1999ல் 132 இடங்கள், 2004ல் 65 இடங்கள், 2008ல் 80 இடங்கள், 2013ல் 122 இடங்கள், 2018ல் 80 இடங்கள் என காங்கிரஸ் கட்சி வென்ற நிலையில், நடப்பு தேர்தலில் 136 இடங்களை கைப்பற்றி புதிய வரலாற்றை காங்கிரஸ் கட்சி பதிவு செய்துள்ளது.