6 கோடி மதிப்புள்ள திமிங்கல எச்சத்தை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வாலிபர்கள் கைது.!
திருவாரூரில் திமிங்கலத்தின் எச்சம் கடத்தப்படுவதாக திருச்சி மண்டல வன பாதுகாவல் அலுவலர் சதீஷுக்கு ரகசிய தகவல் வந்தது. அந்த தகவலின் படி திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் என்ற பகுதியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்தவழியாக மூன்று இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் சந்தேகப்படும் விதமாக வந்துள்ளனர். அவர்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த ஐந்தரை கிலோ திமிங்கல எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வனத்துறையினர் அந்த இளைஞர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் திமிங்கலத்தின் எச்சத்தை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்காக எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட எச்சத்தின் சர்வதேச மதிப்பு சுமார் 6 கோடி ஆகும். வனத்துறையினர் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதக்கவும் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.