குவஹாத்தி, அசாமில், பல தார மணம் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நான்கு பேர் அடங்கிய நிபுணர் குழு அமைத்து, அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா உத்தரவிட்டு உள்ளார்.
வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இம்மாநில சட்டசபையில் சமீபத்தில் பேசிய முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ‘அசாமில், பல தார மணம் செய்யும் நடைமுறையை தடை செய்ய, சட்ட வல்லுனர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும்’ என, தெரிவித்து இருந்தார்.
இதன்படி, பல தார மணம் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, ஓய்வு பெற்ற நீதிபதி ரூபி பூக்கன் தலைமையில், நான்கு பேர் அடங்கிய நிபுணர் குழு அமைத்து, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று உத்தரவிட்டு உள்ளார்.
இந்தக் குழுவில், அசாம் அட்வகேட் ஜெனரல் தேபாஜித் சைகியா, கூடுதல் அட்வகேட் ஜெனரல் நலின் கோஹ்லி, மூத்த வழக்கறிஞர் நெகிபுர் ஜமான் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இது குறித்து, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியதாவது:
நான் ஏற்கனவே கூறியிருந்தபடி, பல தார மணம் நடைமுறைக்கு தடை விதிப்பது குறித்து, சட்டப்படி ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் குழு விரிவாக ஆராய்ந்து, அறிக்கையை, 60 நாட்களுக்குள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த குழு, முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் ஷரத்துகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 25வது பிரிவுடன் இணைத்து, மாநில அளவில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் இருப்பதற்கான வழிகாட்டுதல்கள் தொடர்பாக ஆய்வு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின்படி, முஸ்லிம் ஆண், நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்