சென்னை: கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை ஜப்பான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில், இந்தப் படத்தின் டீசர் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.
மேலும், ஜப்பான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் டீசர் அப்டேட்:கார்த்தி நடிப்பில் இந்தாண்டு முதல் படமாக பொன்னியின் செல்வன் 2 வெளியானது. ஏப்ரல் இறுதியில் வெளியான இந்தப் படம், முதல் பாகத்தை போலவே ரசிகர்களிடம் வரவேற்புப் பெற்றது. கடந்தாண்டு, விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து அசத்தினார் கார்த்தி. அதேபோல் 2023ம் ஆண்டிலும் மாஸ் காட்ட காத்திருக்கிறார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியானதுமே தனது 25வது படத்தில் கமிட்டானார் கார்த்தி. அதன்படி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜூ முருகன் இயக்கும் இந்தப் படத்திற்கு ஜப்பான் என டைட்டில் வைக்கப்பட்டது. மேலும், கார்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் ஜப்பான் படக்குழு வெளியிட்டது. வித்தியாசமாக உருவாகியிருந்த இந்த போஸ்டர் ரசிகர்களிடம் அதிகம் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சோஃபா ஒன்றில் கார்த்தி மயங்கிய நிலையில் படுத்திருக்க, அவருக்குப் பின்னால் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு புகைப்படத்தில் தங்க நிற ஆடையில் கையில் துப்பாக்கியுடன் சுருட்டை முடி என வித்தியாசமான லுக்கில் இன்னொரு கார்த்தி இருக்கிறார். ரெட்ரோ லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் செம்ம கலர்ஃபுல்லாக உள்ளது. இந்தப் படம் ஆக்ஷன் ஜானரில் பணம் கொள்ளையடிப்பதன் பின்னணியில் உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஜப்பான் படம் உருவாகிறது. கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் ஜூன் முதல் வாரம் தொடங்கவுள்ளதாம். அதற்காக 200 குடில்கள் கொண்ட பிரம்மாண்டமான செட் போடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம், ஜப்பான் டீசர் கார்த்தியின் பிறந்தநாளில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மே 25ம் தேதி கார்த்தி தனது 46வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதனை முன்னிட்டு ஜப்பான் படத்தின் டீசரை வெளியிட படக்குழு பிளான் செய்து வருகிறதாம். இருப்பினும் இதுகுறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. அதேபோல், ஜப்பான் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.