லாஸ் ஏஞ்சல்ஸ்: பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான ஜானி டெப் தனது 2வது மனைவியான ஜானி டெப்புடன் நடந்த வழக்கில் பல ஆண்டுகள் கழித்து வெற்றிப் பெற்றார்.
இந்நிலையில், இனி நடிக்க வேண்டாம் இயக்குநர் ஆக மாறலாம் என்கிற முடிவை எடுத்துள்ள ஜானி டெப் தனது முதல் படத்தை இயக்க திட்டமிட்டு அதன் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் இயக்கப் போகும் அந்த படத்துக்கு ‘மோடி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேப்டன் ஜாக்ஸ்பேரோ: 59 வயதாகும் நடிகர் ஜானி டெப் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜாக்ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர்.
ஆக்குவாமேன் ஹீரோயின் ஆம்பர் ஹெர்ட்டை 2வதாக திருமணம் செய்து கொண்ட ஜானி டெப்புக்கு அந்த நடிகையால் நிறைய கொடுமைகள் ஏற்பட்டதாக வழக்கு தொடர பட்டது. ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹெர்ட் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.
ஜானி டெப் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் பலவந்தமாக பலாத்காரம் செய்தார் என்றும் பல குற்றச்சாட்டுக்களை ஆம்பர் ஹெர்ட் அடுக்கிய நிலையில், ஜானி டெப்புக்கு சாதகமாகவே வழக்கின் தீர்ப்பு வெளியானது.
ஆம்பர் ஹெர்ட் தொடுத்த பாலியல் தொல்லை வழக்கு காரணமாக ஜாக்ஸ்பேரோவாக இனிமேல் நடிக்க முடியாத அளவுக்கு பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனின் புதிய பாகத்தில் இருந்து நீக்கப்பட்டார் ஜானி டெப்.
ஆனால், வழக்கு இவர் பக்கம் சாதகமான பின்னர் அந்த படத்தில் மீண்டும் நடிக்க அழைப்புகள் வந்ததாக தகவல்கள் வெளியாகின.
இயக்குநராகும் ஜானி டெப்: புதிதாக எந்த படத்தில் ஹீரோவாக ஜானி டெப் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஒரு படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் ஜானி டெப்.
மேலும், அந்த படத்துக்கு ‘மோடி’ என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
மோடி டைட்டிலில் ஜானி டெப் படம்: மோடி என்றதும் பிரதமர் மோடி என நினைத்து விட வேண்டாம். இது முற்றிலுமாக வேற மோடி. இத்தாலிய கலைஞர் அமெடியோ மோடிகிலான் (Amedeo Modiglian) பயோபிக்கைத் தான் Modi என்கிற டைட்டிலில் படமாக்க உள்ளாராம். இந்த படத்தில் அல் பசினோ முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.