புதுடில்லி: அதிகாரிகள் பணியிட மாற்றத்துக்கு மத்திய அரசு தடையாக இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் புதுடில்லி யூனியன் பிரதேச அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி யூனியன் பிரதேசத்தில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு,அதிகாரிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாக அதிகாரம் தொடர்பாக, யூனியன் பிரதேச அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பிரச்னை உள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு,நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அதிகாரிகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால், முதல்வர் மற்றும் அமைச்சர்களின் உத்தரவுகளை அவர்களால் செயல்படுத்த முடியாது.
அதனால் பொது ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர்த்து, மற்ற அனைத்து நிர்வாக அதிகாரங்களும் புதுடில்லி அரசிடமேஇருக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டது.
இந்நிலையில், புதுடில்லி யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
யூனியன் பிரதேசத்தின் நிர்வாக வசதிக்காக பல அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளோம். ஆனால், இந்த உத்தரவை செயல்படுத்தவிடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டை போடுகிறது.
நிர்வாக அதிகாரம் புதுடில்லி அரசிடமே இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தடையாக உள்ளது. இது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும்.
மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும். ஆனால், அதற்கு கால தாமதம் ஆகும் என்பதால், நேரடியாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரிப்பதற்காக, நீதிபதிகள் அடங்கிய அமர்வை அடுத்த வாரம் அறிவிப்பதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்