புதுடில்லி :கேரளா கடல்பகுதிக்கு அருகே, 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,500 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் மேற்காசிய நாடான ஈரானின் மக்ரான் கடற்பகுதியில் இருந்து, ஒரு கப்பல் வழியாக பல நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தெரியவந்தது.
அந்தக் கப்பலில் இருந்து படகுகள் வாயிலாக போதைப் பொருள், நம் நாட்டுக்குள் கடத்தி வரப்படும் தகவல், நம் கடற்படைக்கு கிடைத்தது.
இதையடுத்து, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவுடன் இணைந்து கடற்படை சோதனையில் நேற்று ஈடுபட்டது.
அப்போது, கேரளாவின் கொச்சிக்கு அருகே கடலில் சென்ற படகு ஒன்று சுற்றி வளைக்கப்பட்டது.
அதில், 134 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த, ‘மெதாம்பிடமைன்’ என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் படகில் இருந்த பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டார்.
கொச்சிக்கு அந்தப் படகு வரவழைக்கப்பட்டு, போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
படகில் இருந்த பாகிஸ்தானியரை கைது செய்துள்ள போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், அந்தப் படகில், 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,500 கிலோ போதைப் பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த வகை போதைப் பொருள் இந்த அளவுக்கு அதிகமாக பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இது குறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
கடல் பகுதி வழியாக போதைப் பொருள் கடத்தி வருவதை தடுக்கும் வகையில், ‘ஆப்பரேஷன் சமுத்திரகுப்தா’ என்ற பெயரில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடத்தப்பட்ட மூன்றாவது பெரிய நடவடிக்கையில், இந்த போதைப் பொருள் சிக்கியுள்ளது.
இந்தப் போதைப் பொருட்கள், தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா, இலங்கை, மாலத்தீவுகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்