சென்னை : ‘மோக்கா புயல் இன்று பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையில், மிகத்தீவிர புயலாக கரையை கடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் நான்கு நாட்களுக்கு, ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய, ‘மோக்கா’ புயலானது, நேற்று முன்தினம் இரவு, அதி தீவிர புயலாக வலுப்பெற்று, வடகிழக்கு திசையில் நகர்ந்தது.
நேற்று மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், போர்ட் பிளேயரில் இருந்து, 560 கி.மீ., வடமேற்கே நிலை கொண்டுஇருந்தது. இது நகர்ந்து, இன்று பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக் கூடும். அந்த சமயத்தில், காற்றின் வேகம் 150 முதல் 160 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 175 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 16, 17ம் தேதி, ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக, 2 முதல் 4 டிகிரி செல்ஷியஸ் உயரக்கூடும்.
சென்னையில் அடுத்த, 24 மணி நேரத்துக்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம், முள்ளங்கினாவிளையில் 6 செ.மீ., கருந்தன்கோடு, தக்கலையில், 5 செ.மீ., மாம்பழத்துறையாறில், 4 செ.மீ., மழை பதிவானது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று, இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
நாளை, தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை கடலோரப் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு
40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று சூறாவளிக் காற்று, மணிக்கு 45 முதல், 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்