வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்து 542 கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் பணிகள் இன்னும் துவங்கவில்லை என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர்களை நியமனம் செய்வது தொடர்பாக ‘ஹிந்து தர்ம பரிஷத்’ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்த போது, அறங்காவலர்களை நியமிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, சஞ்சய் கரோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்களை நியமிக்க மாவட்டக் குழு அமைத்து தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளும், அறங்காவலர்களின் நியமன ஆணைகளின் நகல்களும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் உள்ள 37 ஆயிரத்து 145 கோவில்களில், 780 கோவில்களில், அறங்காவலர் நியமனப் பணிகள் முடிவடைந்துள்ளன; 19 ஆயிரத்து 823 கோவில்களில் நியமிக்கும் பணி நடந்து வருகிறது. மீதியிள்ள 16 ஆயிரத்து 542 கோவில்களில் நியமனப் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. அறங்காவலர்களை நியமிப்பதற்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்த்தல் மற்றும் ஆய்வு செய்வதில் 322 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள், பணி நியமனம் முடிவடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement