`தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை விபுல் ஷா தயாரிக்க, மேற்கு வங்க இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் `கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண்களை இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்து, அவர்களை நாடுகடத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதுபோல’ காட்சிப்படுத்தப்பட்டிருந்ததால், படத்தின் டீசர் வெளியானபோதே கடுமையாக எதிர்ப்பு எழுந்தது.
குறிப்பாக, “உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதை என்ற பெயரில், எவ்வித ஆதாரமும் இல்லாமல் 32,000 இந்துப் பெண்களை மதமாற்றம் செய்து, தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்ததுபோலவும், எதிர்காலத்தில் கேரள மாநிலமே இஸ்லாமிய மாநிலமாக மாறிவிடும்” என்பது போன்ற முற்றிலும் உண்மைக்குப் புறம்பான சம்பவங்களையும் வசனங்களையும் காட்சியமைத்து, இஸ்லாமிய வெறுப்பைக் கக்கியிருப்பதாக கேரள கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உட்படப் பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தமிழ்நாட்டில் எஸ்.டி.பி.ஐ., நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலுள்ள திரையரங்குகளில் எங்கெல்லாம் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானதோ அங்கெல்லாம் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழ்நாட்டில் இப்படம் ஒரு சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு பின்னர், அதுவும் ஓரிரு நாள்களில் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “கேரளா ஸ்டோரி படம் தவறானது என்றால் அதன் தமிழக விநியோக உரிமையை ஏன் ரெட் ஜெயன்ட் வாங்கியது?” என்று கேள்வி எழுப்பியிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனம் ஏன் இப்படியொரு சர்ச்சையான படத்தை வாங்கியது, பின்னர் அரசு ஏன் அதற்குத் தடை விதித்தது என்பது புரியாத புதிராக இருப்பதாகப் பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன.
இதனால் உண்மையில் இப்படத்தின் விநியோக உரிமையை `ரெட் ஜெயன்ட்’ வாங்கியுள்ளதா என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளத் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், “‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் வாங்கவில்லை. அண்ணாமலை கூறியிருப்பது முற்றிலும் தவறான ஒன்று. பொதுவாக இப்போதெல்லாம் ‘ரெட் ஜெயன்ட்’ படம் பண்ணுவதிலோ, விநியோகம் செய்வதிலோ பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களின் சொந்தப் படமான ‘மாமன்னன்’ படத்தை ‘ரெட் ஜெயன்ட்’தான் விநியோகம் செய்யும். அதற்கிடையில் பெரிதாக எந்தப் படத்தையும் அவர்கள் விநியோகம் செய்வதாக இல்லை.
‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரைக்கு வந்திருந்தாலும் பெரிதாக ஓடியிருக்காது. மக்கள் பெரிய நட்சத்திரங்களின் படங்களைத்தான் திரையரங்குகளில் வந்து பார்க்கிறார்கள். மற்ற படங்களைப் பெரும்பாலும் ஓடிடி-யிலேயே பார்த்துவிடுகின்றனர். சில அரசியல் கட்சியினர் சினிமாவைப் பற்றிப் பேசினால்தான் தங்களின் பெயர் வெளியே தெரியும், பேசுபொருளாகும் என்பதற்காகத் திட்டமிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.