அன்புமணி: உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்கணும்.. டிஎன்பிஎஸ்சிக்கு வலியுறுத்தல்.!

வேளாண் உதவி இயக்குனர் பணிக்கு அனைத்து வேளாண் முதுநிலை பட்டதாரிகளையும் அனுமதிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. எனவே தேர்வை ஒத்திவைத்து அனைவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என பாமக தலைவர்

வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 20, 21-ஆம் தேதிகளில் நடத்தவிருக்கும் வேளாண் உதவி இயக்குனர் பணிக்கான போட்டித் தேர்வில் பங்கேற்க எம்.எஸ்சி (வேளாண் விரிவாக்கம்), எம்.எஸ்சி (வேளாண் பொருளாதாரம்) ஆகிய படிப்புகளை படித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் தோட்டக்கலை உதவி இயக்குனர் பணிக்கு தோட்டக்கலையில் அனைத்து வகையான எம்.எஸ்சி படிப்பை படித்தவர்களும் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேளாண் உதவி இயக்குனர் பணிக்கு மட்டும் இருவகை பட்டங்களைத் தவிர மற்ற வேளாண் முது அறிவியல் பட்டதாரிகள் அனுமதிக்கப்படாதது வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

பாதிக்கப்பட்ட வேளாண் முது அறிவியல் பட்டதாரிகள் 7 பேர் இது தொடர்பாக தொடர்ந்த வழக்குகளை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இது வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இந்தத் தீர்ப்பு வழக்குத் தொடர்ந்த 7 பேருக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொருந்த வேண்டும். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 20-ஆம் தேதிக்கு முன்பாக, அனைவரிடமும் விண்ணப்பம் பெற்று, அவற்றை ஆய்வு செய்து அவர்களை தேர்வுக்கு அனுமதிப்பது சாத்தியமற்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நிர்ணயித்த தவறான கல்வித் தகுதியால் பாதிக்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நீதி வழங்கும் வகையில், வரும் 20, 21-ஆம் தேதிகளில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள 3 பணிகளுக்கான தேர்வுகளில், வேளாண் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வை மட்டும் ஒத்திவைக்க வேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி தகுதியான அனைவரிடமும் விண்ணப்பங்களைப் பெற்று, புதிதாக விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்காக படிக்க போதிய காலக்கெடு வழங்கி தேர்வை நடத்த தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுகளுக்கான கல்வித்தகுதிகள் அடிக்கடி மாற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் போது, அது தேர்வாணையம் நடத்தும் அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளில் பங்கேற்க தகுதியானதா? என்ற விவரம் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்’’ என

தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.