ஆலை கொட்டகைக்குத் தீ… தொழிலாளர்கள் படுகாயம்… இருதரப்புக்கு இடையே தொடரும் அசம்பாவிதங்கள்..!

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்திலுள்ள வெல்ல உற்பத்தி ஆலையில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் தீ வைத்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். இருவேறு சமூகங்களுக்கு இடையிலான பிரச்சனையில் அங்கு தொடர்ந்து அசம்பாவிதங்கள் அரங்கேறி வருவதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ம் தேதி பட்டதாரி பெண் ஒருவர் ஆடு மேய்க்கச் சென்ற போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள நிலையில், உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோரியும், வழக்கை CBCID க்கு மாற்றக்கோரியும் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொது மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, கொல்லப்பட்ட பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குமான சாதிப் பிரச்சனையாக இந்த சம்பவம் உருவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. வாகனங்கள், வீடுகள், பணியிடங்களுக்கு மாறி மாறி தீ வைத்துக் கொள்வது, மண்ணெண்ணெய், பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசுவது என அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் அரங்கேறி வருகின்றன. போலீசார் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தாலும் அவர்களின் கண்களையும் மறைத்து சிலர் அட்டூழியங்களை அரங்கேற்றி வருவதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் கொல்லப்பட்ட பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எதிர் சமூகத்தைச் சேர்ந்தவர் நடத்தி வரும் பள்ளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றுக்குத் தீ வைத்தனர். இதில் அந்த வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. அதன் தொடர்ச்சியாக அங்குள்ள ஏரியில் மர்ம நபர்கள் விஷம் கலந்ததாகக் கூறப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. எதிர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த ஏரி மீன்களை குத்தகைக்கு எடுத்திருந்தார் என்று கூறப்படுகிறது.

இதற்குப் பழி வாங்கும் விதமாக ஜேடர்பாளையத்தில் முத்துசாமி என்பவருக்குச் சொந்தமான வெல்ல உற்பத்தி ஆலையில், தொழிலாளர்கள் தங்கியிருந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். நள்ளிரவு ஒரு மணியளவில் தொழிலாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது கொட்டகையின் பின்புறத்தில் அட்டை தடுப்பை உடைத்து, துணி ஒன்றை மண்ணெண்ணையில் நனைத்து தீ வைத்து கொட்டகைக்குள் உள்ளே வீசி உள்ளனர்.

இதனால் ஏற்பட்ட தீயில் சிக்கி 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். 2 பேரில் ஒருவருக்கு 90 விழுக்காடு தீக்காயமும், மற்றொருவருக்கு 80 விழுக்காடு தீக்காயமும் ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காயமடைந்த தொழிலாளர்களிடம் மாவட்ட நீதிபதி, நேரில் வாக்குமூலம் பெற்றுச் சென்றார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த நாமக்கல் ஆட்சியர் ஷ்ரேயா சிங், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் அரங்கேறி வருவதால் ஜேடர்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், இருதரப்பினருடமும், போலீசார் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளனர்.

மற்றுமொரு அசம்பாவிதம் ஏற்படும் முன், போலீசார் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு…….

இந்த நிலையில் இரு தரப்பினரின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தவும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த மோதல்களுக்கெல்லாம் மூலக் காரணமாக இருக்கும் கரப்பாளையம் பட்டதாரி பெண் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.