சென்னை: உழைக்காதவர்களுக்கு திமுகவில் இடமில்லை என்று கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்ட செயலாளர்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதன்படி, “வாக்குச்சாவடி குழுக்களுக்கான பணிகளை விரைவாக மேற்கொள்ளவேண்டும். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியினரின் நலன் சார்ந்தும் செயலாற்ற வேண்டும். சுணக்கமாக செயல்படும் மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பணிகளை வேகப்படுத்த வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழா ஏற்பாடுகளை வெகு சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டச்செயலாளர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வருகிறேன். உழைக்காதவர்களுக்கு கட்சியில் இடமில்லை. கட்சிப் பணிகளை பொறுப்போடு செய்ய வேண்டும். இல்லையென்றால் மாற்றப்படுவீர்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்” உள்ளிட்ட அறிவுறுத்தல்களை மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.