புதுடெல்லி: கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பதை பெங்களூருவில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தபிறகு கட்சி மேலிடம் தீர்மானிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வரும், கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும் கனகபுரா தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்ற கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே முதல்வர் நாற்காலியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். இன்று பெங்களூருவில் நடக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வர் யார் என்ற அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, “எங்களுடைய பார்வையாளர்கள் தற்போது பெங்களூரு சென்றுள்ளனர். எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தபிறகு, அவர்கள் புதிய முதல்வர் குறித்த தங்களுடைய கருத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பி வைப்பார்கள். அதன்பிறகு இங்கிருந்து கட்சித் தலைமை ஆலோசித்து புதிய முதல்வரின் பெயரை அறிவிக்கும். கர்நாடக மக்கள் பாஜகவை நிராகரித்து காங்கிரஸ் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துள்ளனர். பொதுமக்களுக்கு நாங்கள் கொடுத்த ஐந்து வாக்குறுதிகளை அமைச்சரவை அமைந்தபின் நிறைவேற்றுவோம்” என தெரிவித்தார்.