கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் தங்கவயல், ஷிமோகா, பத்ராவதி, சாம்ராஜ்நகர், கொள்ளேகால் உள்ளிட்ட இடங்களில் 60 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர். ஆனால் அங்குள்ள காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய பிரதான கட்சிகள் தமிழர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்குவதில்லை என தமிழ் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மேயர் சம்பத் ராஜ், முன்னாள் கவுன்சிலர் ஆனந்த் குமார் உள்ளிட்டோர் தேர்தலில் வாய்ப்பு கேட்டனர். அதில் ஆனந்த்குமாருக்கு பெங்களூருவில் உள்ள சி.வி.ராமன் நகரில் (தனி) போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு அளித்தது. இந்நிலையில் இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் ரகு 69 ஆயிரத்து 228 வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆனந்த்குமார் 52 ஆயிரத்து 833 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் புலிகேசி நகரில் (தனி) பாஜக சார்பில் முரளி என்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.சி.சீனிவாஸ் 87 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முரளி 10 ஆயிரத்து 624 வாக்குகள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.
கோலார் தங்கவயல் (தனி) தொகுதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர். இதனால் அங்கு இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளர்கள் பி.எம்.சுவாமி துரை, சி.எம்.ஆறுமுகம், எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் தொடந்து வென்றனர். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக தமிழர்கள் யாரும் வெற்றி பெற முடியவில்லை.
இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரன் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர் ஜோதி பாசு, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தங்கராஜ் ஆகியோரும் போட்டியிட்டனர். காங்கிரஸூம், பாஜகவும் பணத்தை அதிகளவில் செலவழித்ததால் மூன்று தமிழர்களும் தோல்வி அடைந்தனர். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபா கலா 81 ஆயிரத்து 569 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் அஷ்வினி 31 ஆயிரத்து 102 வாக்குகளும், எஸ்.ராஜேந்திரன் 29 ஆயிரத்து 795 வாக்குகளும், தங்கராஜ் 1008 வாக்குகளும், ஜோதி பாசு 918 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தனர்.
கர்நாடகாவில் போட்டியிட்ட அனைத்து தமிழ் வேட்பாளர்களும் தோல்வி அடைந்ததால் அங்குள்ள தமிழர்களும் தமிழ் அமைப்பினரும் சோகமடைந்துள்ளனர்.