விழுப்புரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார் அந்த கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். அப்போது பேசிய அவர், “கர்நாடகாவில் பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவிருக்கிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தல், இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்திருக்கிறது. மோடி, அமித் ஷா ஆகியோர் கர்நாடகாவில் வீதி வீதியாகச் சென்று ஓட்டுக்கேட்டும்கூட பா.ஜ.க மிகப்பெரிய தோல்வியடைந்திருக்கிறது. இது கர்நாடகாவில் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல, அகில இந்திய பா.ஜ.க-வுக்கும், மோடி – அமித் ஷா கூட்டணிக்கும் ஏற்பட்டிருக்கின்ற மரண அடி என்பதுதான் உண்மை.
இமாச்சலப் பிரதேச தேர்தல், டெல்லி மாநகராட்சித் தேர்தல், சிம்லா மேயர் தேர்தலைத் தொடர்ந்து… தற்போது கர்நாடகத் தேர்தலிலும் பா.ஜ.க தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க படுதோல்வியடைவதற்கு இந்தத் தேர்தல் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. பட்டியலின, பழங்குடியின மக்களின் பிரச்னைகள் மற்றும் சமூக ஒடுக்குமுறைகளை முறியடிப்போம். சாதியற்ற சமதர்ம சமூதாயத்தை உருவாக்குவோம் என்ற அடிப்படையில், விழுப்புரத்தில் வரும் 16-ம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறோம். இதில் தோழமை கட்சிகளைச் சேர்ந்த பலர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். காலம் காலமாக சாதிய ஒடுக்குமுறைக்கு தலித் மக்கள், பழங்குடியின மக்கள் தொடர்ந்து ஆளாகிவருகின்றனர்.
கோயில்களில் சாமி கும்பிட முடியவில்லை, தெருக்களில் நடக்க முடியவில்லை, சமமாக அமர்ந்து டீக்கடைகளில் டீகூட குடிக்க முடியவில்லை. இதுபோன்று பலவிதமான அடக்குமுறைகள் நடந்து கொண்டே வருகின்றன. சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டால், ஆனவக்கொலைகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு சாதிவெறி உச்சத்துக்குச் சென்றிருக்கிற சமூகமாக இந்தச் சமூகம் இருக்கிறது. எனவே பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அனைத்து சமூக கொடுமைகளுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்திதான் விழுப்புரத்தில் மாநாடு நடைபெறவிருக்கிறது.
அண்மையில் ஆளுநர் பேசியிருக்கிறார். அவர் குழந்தையை திருமணம் செய்துகொண்டாராம். அப்படி என்றால், குழந்தை திருமணம்தான் நல்லது எனச் சொல்லவருகிறாரா எனத் தெரியவில்லை. ஏற்கெனவே தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்த காரணத்துக்காக காவல்துறை அவர்களைக் கைதுசெய்தது. அது தவறு என்றும், தீட்சிதர்களைப் பழி வாங்குகிறார்கள் எனவும் ஆளுநர் பகிரங்கமாகப் பேட்டிக் கொடுத்தார். தீட்சிதர்களை மட்டும் கைதுசெய்யக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் இருக்கிறது… இப்படி ஓர் ஆளுநரை இந்தியாவில் வேறு எங்கும் பார்த்திருக்கவே முடியாது. குழந்தைத் திருமணத்தை ஆதரிக்கும் ஓர் ஆளுநர் எப்படி ஓர் ஆளுநராக இருப்பார்.. அரசியல் சட்ட விதிகளுக்கு எப்படி அவர் முரணாகப் பேசுகிறார் என்பதுதான் கேள்வியாக இருக்கிறது.
எனவே, ‘இந்த ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்’ என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். அமைச்சரவை மாற்றம் என்பதை வாரிசு அடிப்படையில் என்று பார்க்க முடியாது. அவர்கள் வீட்டுப் பிள்ளைகளாக இருந்தாலும்கூட, நீண்டகாலமாக அரசியலில் இருக்கிறார்கள். கட்சிப் பொறுப்பு மற்றும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார்கள். அதனடிப்படையில் அமைச்சர் ஆகிறார்கள். டி.ஆர்.பி.ராஜா கிட்டத்தட்ட 25 வருடங்களாக அரசியலில் இருப்பவர். எனவே அதை ‘வாரிசு’ அப்படியென்று பார்க்க முடியாது. கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாமல், திடீரென வந்தவுடன் ஒருவரை அமைச்சராக்குகிறார்கள் என்றால் அதை ‘வாரிசு’ எனச் சொல்லலாம். இதை அப்படி பார்க்க முடியாது.
சாதாரணமாக நடக்கக்கூடிய சில சம்பவங்களை வைத்து சட்ட ஒழுங்கு சரியில்லை எனக் கூறிவிட முடியாது. நிச்சயமாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு நன்றாக இருக்கிறது, அமைதியாக இருக்கிறது என்பதுதான் எங்களுடைய அபிப்ராயம். கடந்த முறை கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை. சில எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கிதான் பொறுப்புக்கு வந்தார்கள். நிச்சயமாக இந்த முறை அதற்கான முயற்சி பண்ணுவார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி அதனைச் சமாளிக்கும். இந்த முறை பா.ஜ.க குதிரை பேரம் நடத்தி ஆட்சி அமைக்க முயன்றால் வெற்றிபெற மாட்டார்கள்” என்றார் காட்டமாக.