கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு – 2 பேர் மாயம்.!
திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம் பட்டர் தோப்பு பகுதியில் ஒரு ஆசிரமத்தில் வேத பாடசாலை அமைந்துள்ளது. இந்த பாடசாலையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அர்ச்சகருக்கு படிக்கும் மாணவர்கள் தங்கியிருந்து வேதம் பயின்று வருகின்றனர்.
அவர்களில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியை சேர்ந்த விஷ்ணு பிரசாத், ஹரி பிரசாத், கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த அபிராம் உள்ளிட்ட நான்கு மாணவர்கள் அப்பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று காலை குளிக்கச் சென்றனர்.
அங்கு அவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று சுழலில் சிக்கி அவர்களை ஆற்று தண்ணீர் இழுத்துச் சென்றுள்ளது. இதில் கோபாலகிருஷ்ணன் என்ற மாணவன் மட்டும் அதிர்ஷ்டவசமாக கரைக்கு தப்பி ஓடி வந்துள்ளார்.
அதன் பின்னர் அவர் சக மாணவர்கள் நீரில் மூழ்கிய தகவலை பாடசாலைக்கு சென்று தெரிவித்துள்ளார். அவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி, தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 3 மாணவர்களையும் தேடினர்.
தேட ஆரம்பித்த சிறிது தூரத்திலேயே விஷ்ணு பிரசாத் பிணமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து மீட்படையினர் மற்ற இரண்டு மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்ததாவது:-
“கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முக்கொம்பு மேல் அணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.