காரைக்குடி: கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தலை தீர்மானிக்க முடியாது. ஆனால் கர்நாடக வெற்றி எங்களுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது என்று சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளை தாண்டி 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வென்றுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றி அக்கட்சிக்கு ஒரு வலுவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தலை தீர்மானிக்க முடியாது என்று சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-
கர்நாடக மாநிலத்தில் இருந்து பாஜகவின் ஊழல் ஆட்சியை மக்கள் விரட்டியுள்ளார்கள். கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு கொடுத்த மகத்தான வெற்றி எங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அங்கு டிகே சிவக்குமார், சித்தராமையா போன்ற தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதே போன்ற தலைவர்கள் தமிழக காங்கிரசில் இல்லை. இது போன்ற தலைமை உருவாக்கப்பட்டால் நிச்சயம் நல்ல பலன் இருக்கும். ஒவ்வொரு தேர்தலின்போதும் காங்கிரஸ் நல்ல மக்கள் நல திட்டங்கள் கொண்ட தேர்தல் வாக்குறுதியினை அளித்து வருகிறது. ஆனால் தேர்தல் சமயத்தில் இந்த வாக்குறுதிகள் சரியாக மக்களை சென்றடைவதில்லை. இந்த முறை கர்நாடகாவில் 6 மாதங்களுக்கு முன்பே தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டதால் மக்களை அடைந்தது. இதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது.
இந்த யுக்தியை மக்களவை தேர்தலிலும் காங்கிரஸ் பயன்படுத்த வேண்டும். கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவை வைத்து மக்களவை தேர்தல் முடிவுகள் இருக்கும் என கூற முடியாது. இருந்தாலும் கர்நாடக வெற்றி எங்களுக்கு ஒரு பலத்தை கொடுக்கும். காவிரி பிரச்சினை இரு மாநிலத்துக்கு இடையேயானது. பேச்சுவார்த்தை மூலமே அதை தீர்க்க முடியும். உள் கட்சிக்குள் பேசி முடிவெடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.