சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிராம வரி கொடுக்காததால் உயிரிழந்த மனைவி உடலை பொது மயானத்தில் புதைக்க எதிர்ப்பு எழுந்ததால் அவரது கணவர் கண்ணீருடன் போலீஸில் புகார் தெரிவித்தார்.
சிங்கம்புணரி அருகே வகுத்தெழுவன்பட்டி ஊராட்சி கே.புதூரில் சில ஆண்டுகளுக்கு முன்பு, பொதுமயானம் அமைக்கப்பட்டது. அப்போது நிலஅளவை உள்ளிட்ட செலவுக்காக கிராம வரி வசூலிக்கப்பட்டது. அந்த வரியை ஒய்யப்பன் என்பவர் கொடுக்கவில்லை. இந்நிலையில் ஒய்யப்பன் மனைவி சுசீலா (47) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து சுசீலாவின் உடலை பொதுமயானத்தில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. கிராம வரி கொடுக்காததால் அவரது உடலை புதைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வேதனையடைந்த ஒய்யப்பன் கண்ணீருடன் சிங்கம்புணரி போலீஸில் புகார் கொடுத்தார். அங்கு சென்ற போலீஸார், பொது மயானத்தில் புதைக்க கூடாது என்று கூறியவர்களை எச்சரித்தனர். இதையடுத்து அவர்கள் அனுமதியளித்ததை அடுத்து பொதுமயானத்தில் சுசீலா உடல் புதைக்கப்பட்டது.