கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் பரபரப்பிற்கு ஆளாக்கியது. ஏனெனில் ஆளுங்கட்சியாக இருந்த பாஜகவிற்கு எதிராக முடிவுகள் வந்துள்ளன. கடந்த தேர்தலை விட 38 இடங்கள் சரிந்து 66ல் பாஜக வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. அதுவே
காங்கிரஸ்
கட்சி 55 இடங்கள் அதிகமாக பெற்று 135ல் வென்று 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்கிறது.
கர்நாடக தேர்தல் முடிவுகள் 2023
இந்நிலையில் ஒரே ஒரு தொகுதியில் நள்ளிரவு வரை இழுபறி நீடித்து பதற்ற நிலையிலேயே வைத்திருந்தது. அது பெங்களூருவில் உள்ள ஜெயா நகர் தொகுதி. இங்கு பாஜக சார்பில் சி.கே.ராமமூர்த்தி, காங்கிரஸ் சார்பில் சவுமியா ரெட்டி, மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் காலே கவுடா ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த தேர்தலில் காங்கிரஸின் சவுமியா ரெட்டி வெற்றி பெற்றிருந்தார்.
ஜெயா நகர் வாக்கு எண்ணிக்கை
இதனால் இம்முறையும் அவரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஜெயா நகரில் உள்ள எஸ்.எஸ்.ஆர்.வி கல்லூரியில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் நெருக்கமான வாக்கு சதவீதத்திலேயே தொடர்ந்தன. 16 சுற்றுகள் முடிந்த நிலையில் 160 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட சவுமியா ரெட்டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
குறைந்த வாக்கு வித்தியாசம்
வாக்கு வித்தியாசம் குறைந்த அளவே இருந்தது. இதன் காரணமாக முடிவுகளை பாஜகவினர் ஏற்கவில்லை. மீண்டும் வாக்கு எண்ணிக்கையை நடத்துமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முதல் முறை மறுவாக்கு எண்ணிக்கை நடத்திய போது சவுமியா வாக்குகள் முன்பை விட 294 அதிகரித்தது. இது மேலும் குழப்பத்தை விளைவித்தது. உடனே மீண்டும் ஒருமுறை எண்ண வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
பாஜக வெற்றி என அறிவிப்பு
அதில் பாஜக 17 வாக்குகள் முன்னிலை பெற்றது. உடனே காங்கிரஸ் கட்சியினர் விடவில்லை. மீண்டும் வாக்குகளை எண்ணுமாறு அறிவுறுத்தினர். மூன்றாவது முறையும் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகளை வெளியிடாமல் இருந்தனர். இதனால் பதற்றம் அதிகரித்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கடைசியாக 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேப்டாளர் சி.கே.ராமமூர்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
டிகே சிவக்குமார் போராட்டம்
இதைக் கண்டித்து டிகே சிவக்குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பெங்களூரு மாவட்ட தேர்தல் அதிகாரி துஷார் கிரி நாத் நேரில் வந்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகப் போவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.