டெல்லி: மத்திய புலனாய்வுத் துறை எனப்படும் சிபிஐயின் அடுத்த இயக்குநராக கர்நாடக காவல்துறை இயக்குநர் பிரவீன் சூட்டை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரவீன் சூட்டின் நியமனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் அடங்கிய உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால் வரும் மே 25ம் தேதி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார். இதன்பின், புதிய இயக்குநராக பிரவீன் சூட் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரவீன் சூட் யார்?: 1986-பேட்ச் கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரி இந்த பிரவீன் சூட், ஐஐடி-டெல்லி, ஐஐஎம்-பெங்களூரு மற்றும் நியூயார்க்கில் உள்ள சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும்கூட.
1989ல் மைசூரில் துணைக் காவல் கண்காணிப்பாளராகத் தனது பணியைத் தொடங்கியவர், பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் காவல் கண்காணிப்பாளராகவும், பெங்களூரில் துணைக் காவல் ஆணையராக (DCP) பணியாற்றியுள்ளார். 2004 முதல் 2007 வரை மைசூர் நகர காவல் ஆணையராகவும் பணியாற்றினார். அவரது பதவிக் காலத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் உட்பட பயங்கரவாதிகள் நெட்வொர்க்கை கண்டறிவதில் திறம்பட செயல்பட்டதற்காக அதிகாரிகள் மத்தியில் அறியப்படுகிறார்.
2011 வரை பெங்களூரு போக்குவரத்து காவல்துறையில் கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரவீன் 1996ல் சிறந்த சேவைக்கான கர்நாடக முதலமைச்சரின் தங்கப் பதக்கத்தையும், 2002ல் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கத்தையும், 2011ல் சிறந்த சேவைக்கான ஜனாதிபதி பதக்கத்தையும் பெற்றிருக்கிறார்.
மாநில உள்துறை முதன்மை செயலாளராகவும், கர்நாடக மாநில ரிசர்வ் போலீஸ் ஏடிஜிபியாகவும், நிர்வாக ஏடிஜிபியாகவும் பணியாற்றிய சமயத்தில் பெண்கள் உட்பட குடிமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தியதற்காக வெகுவாக பாராட்டப்பட்டார்.
டிகே சிவக்குமார் உடன் பிரச்சனை?: பிஜேபி ஆட்சியில் காங்கிரஸ் கட்சியினர் மீது அதிகமான வழக்குகள் பதிந்ததாக டிகே சிவக்குமார் டிஜிபியாக இருந்த பிரவீன் சூட் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். ஒருகட்டத்தில் பிரவீன் சூட்டை “நாலயக்” என்று அழைத்தார். நாலயக் என்றால் பயனற்றவர் என்று பொருள். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிரவீன் சூட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது, அக்கட்சியில் இருந்து டிகே சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில், பிரவீன் சூட் சிபிஐ இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டிஜிபி பிரவீன், 2024ல் ஓய்வுபெற இருந்த நிலையில்தான் சிபிஐ இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு வருடங்கள் அவர் இந்தப் பதவியில் நீட்டிப்பார் என்று தெரிகிறது.