பெங்களூரு: தமிழ்நாடு, புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தினேஷ் குண்டுராவ் கர்நாடக தேர்தலில் பெங்களூருவில் உள்ள காந்தி நகர் தொகுதியில் போட்டியிட்டார்.
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் இந்தத் தொகுதியில் அவரை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, புதுச்சேரி முன்னாள் முதல்வர்கள் நாராயணசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர் திருநாவுகரசர், காங்கிரஸ் எம்பிக்கள் கார்த்தி சிதம்பரம், வசந்த் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்தனர்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தினேஷ் குண்டு ராவுக்கும், பாஜக வேட்பாளர் சப்தகிரி கவுடாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 16-வது சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தினேஷ் குண்டுராவ் 54 ஆயிரத்து 118 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் சப்தகிரி கவுடா 54 ஆயிரத்து 13 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் 105 வாக்குகள் வித்தியாசத்தில் தினேஷ் குண்டுராவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.