நாமக்கல் : இளம்பெண் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காரபாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவேகானந்தன்-நித்யா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நித்யா கடந்த மார்ச் மாதம் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஓடைக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அனால், அன்று மாலை ஆடுகள் மட்டும் வீட்டிற்கு வந்த நிலையில், நித்யா வீடு திரும்பவில்லை.
இதனால் சந்தேகமடைந்த கணவர் விவேகானந்தன், நித்யா ஆடு மேய்த்த பகுதிக்குச் சென்று தேடியுள்ளார். அப்போது அங்கு நித்யா ஆடைகள் கிழிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த விவேகானந்தன் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் படி அவர்கள் விரைந்து வந்து நித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்த கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, ”நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 11.03.2023 அன்று கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஜேடர்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 17 வயது இளஞ்சிறார் ஒருவர் கைது செய்யப்பட்டார். புலன் விசாரணையில் உள்ள இவ்வழக்கை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் முனைவர் C.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.