பணம் கொடுத்து பணியில் சேர்ந்த.. 36,000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்.. கொல்கத்தா ஹைகோர்ட் அதிரடி ஆர்டர்!

கொல்கத்தா:
மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமனத்தில் பெரும் ஊழல் நடைபெற்றதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் 36 ஆயிரம் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆசிரியர்கள் உரிய தகுதி ஏதும் இல்லாமல் பணம் கொடுத்து வேலை வாங்கி இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

அரசுப் பணிகளில் பணம் கொடுத்து சேருவது என்பது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. காவல்துறை முதல் கல்வித்துறை வரை இந்த முறைகேடு நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.

இதனால் தகுதிவாய்ந்தவர்கள் அரசு இயந்திரங்களில் இடம்பெற முடியாமல் போவதால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, கல்வித்துறையில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறுவதால் தகுதியில்லாதவர்கள் ஆசிரியர்களாக வந்து ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுகின்றனர். இதுபோன்ற முறைகேடுக்கு தான் கொல்கத்தா உயர் நீதிமன்றம் செக் வைத்துள்ளது.

ஆசிரியர் நியமனம்:
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 2016-ம் ஆண்டு 42 ஆயிரத்து 500 பேர் அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த தேர்ச்சிப் பட்டியலில் இடம்பெறாத 140 பேர் இந்த பணி நியமன உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

சிபிஐ விசாரணை:
இதனிடையே, இந்த ஆசிரியர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் ஒருபுறம் விசாரித்து வந்தனர். இதில் முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, மேற்கு வங்க கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி உள்ளிட்டோர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

அதிரடி தீர்ப்பு:
இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வழக்கின் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி அபிஜித் கங்கோபதாய் தீர்ப்பளித்தார். அவர் கூறுகையில், “ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்ட 42 ஆயிரத்து 500 பேரில் 6,500 பேர் மட்டுமே முறையாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

36000 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்:
இதில் பிரம்மாண்ட ஊழல் நடைபெற்றிருப்பது உறுதியாகி உள்ளது. எனவே, தகுதியில்லாமல் பணி நியமனம் செய்யப்பட்ட 36,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். இவர்களின் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்களை அரசு உடனடியாக நியமிக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.