விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகேயுள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு, முகநூல் (Facebook) வாயிலாக மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகியிருக்கிறார். ‘எனக்கென யாரும் கிடையாது. காரைக்கால் பகுதியில் வசித்து வருகிறேன்’ என்று கூறி, மணிகண்டனிடம் நட்பாகப் பழகினராம். பின்னர் அது காதலாக மாறியிருக்கிறது. திருமணத்துக்குப் பெற்றோரின் ஒப்புதலைப் பெற்ற மணிகண்டன், 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் மகாலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
சுமார் 28 நாள்கள் மட்டுமே மணிகண்டனின் வீட்டிலிருந்த மகாலட்சுமி… 14.12.2022 அன்று சொத்துப் பிரச்னை காரணமாக தனது ஊருக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றாராம். ஆனால், மகாலட்சுமி வீட்டுக்குத் திரும்பாததால் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மணிகண்டன் பேசியிருக்கிறார். அப்போது, “சீக்கிரம் வந்துவிடுகிறேன்” என்று கூறி வந்தாராம். அதனைத் தொடர்ந்து ஒரு வாரகாலமாக மகாலட்சுமி தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஒருகட்டத்தில் அழைப்பை ஏற்ற மகாலட்சுமி, “என்னைத் தேடி வந்தால் கொன்று விடுவேன்” என்று மிரட்டல் விடுத்தாராம். இது மட்டுமின்றி, மணிகண்டனின் வீட்டிலிருந்து சென்ற மகாலட்சுமி, 8 சவரன் நகை மற்றும் ரூ.1,00,000 ரொக்கத்தை கையுடன் எடுத்துச் சென்றிருக்கிறார். இதனால் மிகுந்த அதிர்ச்சியடைந்த மணிகண்டன்… மகாலட்சுமி தன்னை ஏமாற்றித் திருமணம் செய்ததோடு, தனது வீட்டிலிருந்த பணம், நகைகளை எடுத்துச் சென்றுவிட்டதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கடந்த பிப்ரவரி மாதம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்படி வளத்தி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
மேலும், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாதாவின் உத்தரவின்பேரில், ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மகாலட்சுமியைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்தது. தீவிரமாகத் தேடப்பட்டுவந்த மகாலட்சுமி, நேற்று (13.05.2023) அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்திருக்கின்றன. கோத்தகிரி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி, இதுபோன்று பல ஆண்களை ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களின் வீட்டிலுள்ள பொருள்களை திருடிச் செல்வதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். மணிகண்டனை 5-வதாக திருமணம் செய்து ஏமாற்றிவிட்டுச் சென்றவர், சேலம் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6-வதாக திருமணம் செய்து வசித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் மகாலட்சுமியைக் கைதுசெய்த தனிப்படை போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர். பல ஆண்களை ஏமாற்றித் திருமணம் செய்து, அவர்களின் வீட்டிலுள்ள பணம் நகைகளைத் திருடிச் சென்ற பெண் ஒருவர், கைதுசெய்யப்பட்டிருக்கும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.