கொச்சி: போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, இந்திய கடற்படையினர் இணைந்து நடத்திய சோதனையில் கேரள மாநிலம் கொச்சியில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருள் கடத்தி வரப்பட்ட கப்பலில் இருந்து பாகிஸ்தானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.
இந்திய கடற்பரப்பு வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக 15 நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவு(என்சிபி) மற்றும் இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, இந்திய கடல் எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் அரபிக்கடலில் என்சிபி மற்றும் இந்திய கடற்படை இணைந்து நடத்திய சோதனையில் நேற்று 2,500 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.12,000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை கைப்பற்றப்பட்டதில் இதுவே அதிகபட்ச மதிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போதைப் பொருள்கடத்தல் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் சஞ்சய் குமார் சிங் கூறியதாவது: இந்திய கடற்பரப்பு வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்க ‘சமுத்திர குப்தா’ என்ற பெயரில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாகவே, தற்போது ரூ.12,000 கோடி மதிப்புள்ள 2,500 கிலோ மெத்தஃபெட்டமைன் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளோம். மொத்தம் 134 மூட்டைகள் கைப்பற்றப்பட்டன.
தாய் கப்பல் என்று அழைக்கப்படும் மிகப் பெரிய கப்பலில் இருந்து இந்த போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது. கடலில் பயணித்து வரும் வழிகளில் பல்வேறு சிறு படகுகளுக்கு இந்த தாய் கப்பலில் இருந்து போதைப் பொருள் மாற்றப்படும். அந்த சிறிய படகுகள் வழியாக வெவ்வேறு நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தப்படும்.
தற்போது பிடிபட்டுள்ள மூட்டைகளில் பாகிஸ்தான் நாட்டு அடையாளங்கள் உள்ளன. இந்த கப்பலில் இருந்து பாகிஸ்தானி ஒருவரை கைது செய்துள்ளோம். இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து இந்திய கடற்பரப்புக்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘சமுத்திரகுப்தா ஆபரேஷன்’ தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் கடற்பரப்பில், ஆப்கானிஸ்தான், பலுசிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட 529 கிலோ ஹாஷிஷ், 221 கிலோ மெத்தஃபெட்டமைன், 13 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரள கடற்பரப்பில் ஈரானில் இருந்து கடத்திவரப்பட்ட 200 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டது. தற்போது 2,500 கிலோ மெத்தஃபெட்டமைன் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவரை ‘சமுத்திரகுப்தா ஆபரேஷன்’ திட்டத்தின்கீழ் கடந்த ஒன்றரை ஆண்டில் 3,200 கிலோ மெத்தஃபெட்டமைன், 529 கிலோ ஹாஷிஷ், 500 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.