சோஷியல் மீடியாவில் பகிரப்படும் தகவல்கள் சில நேரங்களில் பெரிய வன்முறைக்கு வித்திட்டுவிடுகின்றன. சோஷியல் மீடியா பதிவுகளால் அதிகமான இடங்களில் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் சம்பங்களும் நடக்கின்றன. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சோஷியல் மீடியா பதிவால் மிகப்பெரிய அளவில் இரு பிரிவினர் இடையே வன்முறை ஏற்பட்டிருக்கிறது. மாநிலத்திலுள்ள அகோலாவில் நேற்று இரவு மதம் தொடர்பான தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகப் பரவியது. இந்தப் பதிவால் அகோலாவின் பழைய நகரம் பகுதியில் இரு பிரினரிடையே மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் கற்களைவீசித் தாக்கிக்கொண்டனர். இரவு 11:30 மணி வரை இந்தக் கலவரம் நடந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்தக் கலவரத்தில் இரண்டு போலீஸார் உட்பட 8 பேர் காயமடைந்தனர். அதோடு ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சந்திப், “மதம் தொடர்பான தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலானதால் கலவரம் ஏற்பட்டது. கலவரக்காரர்கள் கல்வீசியதில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். 8 பேர் காயமடைந்திருக்கின்றனர். போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசிக் கலவரத்தைக் கட்டுப்படுத்தினர். நிலைமை இப்போது கட்டுக்குள் இருக்கிறது” என்றார்.
கலவரம் தொடர்பாக 26 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகக் கூடுதல் கண்காணிப்பாளர் மோனிகா ராவுத் தெரிவித்தார். இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட் டிருக்கின்றன. மாவட்ட நீதிபதி நீமா அரோரா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
அருகிலுள்ள அமராவதியிலிருந்து ஆயிரம் ரிசர்வ் போலீஸார் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். மாவட்ட பொறுப்பு அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், மக்கள் அமைதி காக்கவேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.