மண்ணை கவ்விய சி.டி. ரவி.. சிஷ்யனை வைத்தே குருவை வீழ்த்திய காங்கிரஸ்.. மாஸ்டர் ப்ளான்!

பெங்களூர்:
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. அதேபோல, அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சி.டி. ரவியும் மண்ணை கவ்வியுள்ளார். சி.டி. ரவியின் கோட்டையை அவரது சிஷ்யனை வைத்தே காங்கிரஸ் தகர்த்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

கர்நாடகா பாஜகவில் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகிய தலைவர்களின் வரிசையில் இருப்பவர் சி.டி. ரவி. கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், முதல்வர் பதவியில் அமர்த்துவதற்கு பரிசீலிக்கப்பட்ட தலைவர்களின் லிஸ்ட்டில் முக்கிய இடத்திலும் சி.டி. ரவி இருந்தார்.

கர்நாடகா பாஜகவில் மட்டுமல்லாமல் தமிழக பாஜகவிலும் சி.டி. ரவியின் கை படர்ந்திருந்தது. தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரவும் பதவி வகித்து வந்தார் சி.டி. ரவி. கட்சியில் அவருக்கு தேசிய பொதுச்செயலாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

சி.டி. ரவியின் இரும்புக் கோட்டை:
கர்நாடகாவில் சிக்மகளூர் தொகுதி சி.டி. ரவியின் இரும்புக் கோட்டையாக விளங்கி வந்தது. கடந்த 2004-ம் ஆண்டு முதல் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியிருக்கிறார் சி.டி. ரவி. இதனால் சிக்மகளூர் தொகுதியை காங்கிரஸால் கைப்பற்றவே முடியாது என்கிற நிலைதான் சில மாதங்களுக்கு முன்பு வரை இருந்தது.

பிரிந்து சென்ற சிஷ்யன்:
இதுபோன்ற சூழலில் தான், கர்நாடகா தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சி.டி. ரவியின் வலதுகரமாக இருந்த தம்மையா, கருத்துவேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து பிரிந்தார்.இந்த சந்தர்ப்பத்தை காங்கிரஸ் சரியாக பயன்படுத்திக் கொண்டது. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தம்மையாவை தங்கள் பக்கம் காங்கிரஸ் இழுத்துக்கொண்டது. சிக்மகளூர் மாவட்டம் முழுவதும் சி.டி. ரவிக்கு எப்படி செல்வாக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு செல்வாக்கு பெற்றவர் தம்மையா.

மாஸ்டர் பிளான்:
இந்நிலையில், கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் வழக்கம் போல சிக்மகளூர் தொகுதி சி.டி. ரவிக்கு ஒதுக்கப்பட்டது. அதே வேளையில், சி.டி. ரவிக்கு எதிராக தம்மையாவை களத்தில் இறங்கியது காங்கிரஸ். இது, சி.டி. ரவிக்கு பெரும் கலக்கத்தை கொடுத்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தம்மையாவுக்கும் சிக்மகளூர் தொகுதியில் பெரும் செல்வாக்கு இருப்பதால், தான் இந்த தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோமோ என்கிற பதற்றம் சி.டி. ரவிக்கு உண்டானது.

குருவை வீழ்த்திய சிஷ்யன்:
இதனால் களப்பணியாற்றி போதிலும், பெரிய அளவு நம்பிக்கையுடன் சி.டி. ரவி இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தம்மையாவோ சி.டி. ரவியை வீழ்த்தியே தீருவது என்ற உறுதியுடன் சிக்மகளூரில் சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் செய்தார். இதன் காரணமாக, சிக்மகளூரில் தம்மையாவிடம் சி.டி. ரவி படுதோல்வி அடைந்திருக்கிறார்.

யாருடைய ஸ்கெட்ச்?
சுமார் 20 ஆண்டுகளாக பாஜகவின் இரும்புக் கோட்டையாக திகழ்ந்து வந்த சிக்மகளூரை, சி.டி. ரவியின் சிஷ்யனை வைத்தே காங்கிரஸ் சூறையாடியுள்ளது. தம்மையாவை கட்சிக்குள் இழுத்தது, அவரை சிக்மகளூரில் போட்டியிட வைத்த மாஸ்டர் பிளானை தீட்டியவர் டி.கே. சிவக்குமார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.