ஐதராபாத்,
ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 19-வது ஓவரில் லக்னோ வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் வீசிய 3-வது பந்தை ஐதராபாத் பேட்ஸ்மேன் அப்துல் சமத் எதிர்கொண்டார். இடுப்பளவுக்கு மேலாக வந்த அந்த பந்தை சமத் சமாளித்து ஆடினார். பந்து வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு எழும்பி வந்ததால் அதனை கள நடுவர் நோ-பால் என்று அறிவித்தார். ஆனால் நடுவரின் முடிவை எதிர்த்து லக்னோ அணியினர் அப்பீல் செய்தனர். இதனையடுத்து வீடியோவை ஆய்வு செய்த 3-வது நடுவர் பேட்ஸ்மேன் சற்று குனிந்தபடி ஆடியதால் அது நோ-பால் இல்லை என்று தெரிவித்தார்.
இதற்கு அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஹென்ரிச் கிளாசென், சமத் ஆகியோர் தங்கள் அதிருப்தியை தெரிவித்துடன் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் தங்கள் அணிக்கு இழைக்கப்பட்ட அநீதியை தாங்க முடியாத ஐதராபாத் அணியின் ரசிகர்களில் சிலர் தங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை மைதானத்தில் ஒரு பக்கத்தில் அமர்ந்து இருந்த லக்னோ அணியினரை நோக்கி வீசினர்.
இதனால் கோமடைந்த லக்னோ அணியின் தலைமை பயிற்சியார் ஆன்டி பிளவர் உள்ளிட்ட அந்த அணியினர் ரசிகர்களை நோக்கி திட்டியடி முன்னேறியதால் போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது சில ரசிகர்கள் கோலி, கோலி என்று குரல் எழுப்பி லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீரை வெறுப்பேற்றினார்கள். நடுவர்கள் லக்னோ அணி நிர்வாகத்தினரை சமாதானப்படுத்தியதை அடுத்து சுமார் 5 நிமிட பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்து நடந்தது.