சென்னை: 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சுகன்யா.
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் நடித்துள்ளார்.
அதேபோல், கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என 90ஸ் டாப் ஹீரோக்களுடன் நடித்துள்ள சுகன்யா, ரஜினியுடன் மட்டும் ஜோடி சேரவே இல்லை.
இந்நிலையில், சூப்பர் ஸ்டாருடன் நடிக்க முடியாமல் போனதான் காரணம் குறித்து சுகன்யா மனம் திறந்துள்ளார்.
ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனது ஏன்: பாரதிராஜா இயக்கத்தில் 1991ம் ஆண்டு வெளியான திரைப்படம் புது நெல்லு புது நாத்து. இந்தப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுகன்யா. பரதநாட்டிய டான்ஸரான சுகன்யா, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழில் கமலுடன் மகாநதி, இந்தியன், விஜயகாந்த் ஜோடியாக சின்ன கவுண்டர், சக்கரைத் தேவன் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் உட்பட மேலும் சில முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துள்ளார் சுகன்யா. நாயகியாக இல்லாமல் சில்லுன்னு ஒரு காதல், என்னமோ நடக்குது, மொட்ட சிவா கெட்ட சிவா, திருமணம் போன்ற படங்களில் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்தபோதும், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இதுவரை ஜோடியாக நடித்ததில்லை சுகன்யா. இதுகுறித்து ரசிகர்களுக்கும் நீண்ட நாட்களாகவே சந்தேகம் இருந்து வந்தது. ஹீரோவாக நடிக்கத் தொடங்கியது முதல் பெரும்பாலும் அனைத்து முன்னணி நடிகைகளுடனும் ரஜினி நடித்துவிட்டார். அதனால், ரஜினி ரசிகர்களுக்கும் இதுபற்றி சந்தேகம் இருந்தது.

இந்நிலையில், ரஜினியுடன் இதுவரை நடிக்க முடியாமல் போனது பற்றி நடிகை சுகன்யாவே மனம் திறந்துள்ளார். சமீபத்தில் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டிக் கொடுத்திருந்தார். அப்போது பேசிய அவர், 15 ஆண்டுகளாக ஓய்வே இல்லாமல் பிஸியாக நடித்த எனக்கு ரஜினியுடன் மட்டும் ஜோடி சேர முடியாமல் போனது என வருத்தமாக பேசியுள்ளார். ஒரு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள விமான நிலையம் சென்றுள்ளாராம்.
அப்போது, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரும் விமான நிலையம் சென்றுள்ளார். அந்நேரம் சுகன்யாவை பார்த்த கேஎஸ் ரவிக்குமார், திடீரென அவரை திட்டியுள்ளார். மேலும், நீங்க ஏன் ரஜினி படத்தில் நடிக்க மாட்டேன்னு சொன்னீங்கன்னும் கேட்டுள்ளார். இதனைக் கேட்ட சுகன்யா அதிர்ச்சியுடன் கேஎஸ் ரவிக்குமாரிடம் விவரம் கேட்டுள்ளார். அதன்பின்னர் தான் முத்து படத்தில் மீனாவின் கேரக்டரில் நடிக்க முதலில் சுகன்யாவை தான் செலக்ட் செய்திருந்தாராம் கேஎஸ் ரவிக்குமார்.
அவர் இப்படி சொன்னதும் அதிர்ச்சியான சுகன்யா, இந்த விவரம் இப்போது தான் தனக்கு தெரியும் எனக் கூறியுள்ளார். இதனால் தான் ரஜினியுடன் நடிக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முத்து படத்தில் மட்டும் தான் ரஜினியுடன் நடிக்க சுகன்யாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அது நடக்காமல் போனதால் ரொம்பவே வருத்தப்பட்டுள்ளார் சுகன்யா.