லோகேஸின் சினி யுனிவர்ஸ்.. ரூ.25000 கோடி போதை வஸ்து நிஜ ரோலக்ஸை தட்டி தூக்கினர்..! நடுக்கடலில் பரபர ஷேசிங்

விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களில் வருவது போன்று 2500 கிலோ போதை பொருட்களுடன், நடுக்கடலில் தண்ணி காட்டிய ரோலக்ஸை , கடற்படை உதவியுடன் தேசிய போதை பொருள் தடுப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர். 25 ஆயிரம் கோடி மதிப்பிலான போதை பொருட்கள் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனது திரைப்படங்களில் போதை பொருள் கடத்தல் குறித்தும், அதில் ஈடுபட்டுள்ள சர்வதேச கடத்தல் கும்பல் குறித்தும், அவர்களை போலீசார் மடக்கிப்பிடிப்பது குறித்தும் வியக்கதக்க காட்சிகளுடன் படம் எடுத்து ரசிகர்களை மகிழ்விப்பார்

எல்.சி.யூ. படங்களில் காண்பித்த காட்சிகளையே மிஞ்சும் சம்பவத்தை இந்திய கடற்படையின் உளவு பிரிவு கொடுத்த தகவலின் பேரில் தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடுக்கடலில் நிகழ்த்தி காட்டி உள்ளனர்.

இந்திய கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுப்பதற்காக ஆப்ரேஷன் சமுத்திரகுப்த் என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் குமார் சிங் தலைமையில் அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 529 கிலோ ஹாசிஸ், 221 கிலோ மெத்தபட்டமைன், 13 கிலோ ஹெராயின் ஆகிய போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட 200 கிலோ ஹெராயின் போதைப் பொருளை கேரள கடற்கரை பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பறிமுதல் செய்தனர்.

இலங்கை மற்றும் மாலத்தீவுகள் உடன் இணைந்து நடத்திய சோதனையில் கடந்த ஆண்டு டிசம்பரில் 286 கிலோ ஹெராயின் மற்றும் 128 கிலோ மெத்தப்டமைன் மற்றும் 19 கடத்தல் காரர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாலு கிலோ ஹெராயினுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சிய மக்கான் கடற் பகுதியில் மிகப்பெரிய மதர்ஷிப் ஒன்றில் அதிகளவு போதைப்பொருளை எடுத்துச்சென்று இந்திய கடற்பகுதி வழியாக பல்வேறு சிறு சிறு கப்பல்களில் பிரித்து போதைப் பொருளை கடத்தி செல்ல திட்டமிட்டிருப்பது அறிந்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கடற்படை உளவு பிரிவு இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நடுக்கடலில் 134 மிகப்பெரிய மூட்டைகளில் போதை பொருட்களுடன் வந்த பெரிய கப்பலை அதிகாரிகள் சினிமா பாணியில் விரட்டிச்சென்று மடக்கினர். அந்த கப்பலில் இருந்த மொத்த போதை வஸ்துக்களையும் கைப்பற்றினர். சினிமா ரோலக்ஸ் போல நடுக்கடலில் தண்ணி காட்டிய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மதர் கப்பல் கொச்சின் கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.

கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட போதைப் பொருளை கணக்கிடும் பணி நடைபெற்று வரும் நிலையில் இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 2500 கிலோ மெத்தபட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இதன் சர்வதேச சந்தை மதிப்பு 25 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்பட்ட இந்த போதை பொருள் எந்தெந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்றும் இதன் பின்னணியில் தொடர்புடையவர்கள் யார் ? என்பது குறித்தும் அதிகாரிகள் விரிவான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.