உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள கோக்கலாடா என்ற மலை கிராமத்தில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவால் மூடப்பட்டு, பாழடைந்து கிடந்த அரசு உயர்நிலை பள்ளியை, தன் சொந்த முயற்சியால் திறக்கச் செய்து, மீண்டும் செயல்பட வைத்திருக்கிறார், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ராஜேஸ்வரி.
அவர் கூறியதாவது:
எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள கோக்கலாடா கிராமத்தில், அரசு பள்ளி மூடப்பட்டு, புதர் மண்டிக் கிடந்தது. அதைப் பார்த்த, நான் கவலை அடைந்தேன். இந்தப் பள்ளியை நம்பி, 10 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் இருந்தனர். மாணவ – மாணவியர் எண்ணிக்கை குறைந்ததால், பள்ளியை மூடி விட்டனர். பள்ளி இயங்காததால், 10 கி.மீ., துாரத்தில் உள்ள மற்றொரு பள்ளிக்கு, மாணவர்கள் சிரமத்தோடு பஸ்சில் சென்று வருவது தெரியவந்தது.
அதனால், கோக்கலாடா பள்ளியை எப்பாடு பட்டாவது திறந்தே ஆகணும் என்ற சபதத்தோடு, வெறித் தனமாக களமிறங்கினேன். வீடு வீடாகச் சென்று பெற்றோரை சந்தித்து, மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்படி கூறினேன்.
நானும் என் பிள்ளைகளை முதலில், அந்தப் பள்ளியில் சேர்த்தேன்; அதைப் பார்த்து, மற்றவர்களும் சேர்க்கத் துவங்கினர். அதுமட்டுமின்றி, என் நிதியுதவியுடன், நண்பர்களிடமும் நிதி பெற்று, ௬ லட்சம் ரூபாய் செலவழித்து பள்ளியை புதுப்பித்தேன். அதன்பின், பள்ளி சிறப்பாக செயல்பட ஆரம்பித்தது. இதை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவதே என் லட்சியம்.
இவ்வாறு கவுன்சிலர் ராஜேஸ்வரி கூறினார்.
‘பணத்தையும், பதவியையும் தேடி ஓடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில், இப்படியும் ஒரு கவுன்சிலரா’ என, நம்மை வியக்க வைக்கிறார் ராஜேஸ்வரி. இவரின் தன்னலமற்ற சேவையால், இவர் வகிக்கும் பதவியே பெருமை அடைகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்