சென்னை: பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் வீட்டுக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.
மிரட்டல் காரணமாக தியாகராய நகரில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஃபர்ஹானா படத்திற்கு ஒருதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.
ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் மே 12ம் தேதி வெளியானது. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஃபர்ஹானா என்ற முஸ்லிம் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் இஸ்லாமியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது.
ஆனால், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஃபர்ஹானா படத்திற்கு ஆதரவாக தனது கருத்தினை தெரிவித்திருந்தார். அதேபோல், முக்கியமான இஸ்லாமிய பிரபலங்கள், இஸ்லாமிய அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் படத்தை தனியாக திரையிட்டுக் காட்டப்பட்டது. அப்போது ஃபர்ஹானா படத்தை பெரும்பாலானோர் எந்தவித சர்ச்சையான காட்சிகளும் இல்லையென கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனாலும் தொடர்ந்து இந்தப் படத்துக்கு ஒருசில இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. மேலும், ஃபர்ஹானா படத்தை திரையிடவும் அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஃபர்ஹனா பட சர்ச்சை காரணமாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒருதரப்பினர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனால் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடு அருகே சிறிது பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக திருவாரூரில் ஃபர்ஹானா படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தியதாக சொல்லப்பட்டது. இதனால், ஃபர்ஹானா படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு நிர்வாகம் அறிவித்ததாக இருதினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மையில்லை என பின்னர் தெரியவந்தது.
சமீபத்தில் வெளியான புர்கா, தி கேரளா ஸ்டோரி படங்களுக்கும் இஸ்லாமியர்களிடையே கடும் எதிர்ப்பு காணப்பட்டது. ஃபர்ஹானா படத்தை பார்க்காமலேயே சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஃபர்ஹானா படம் பார்த்த பலரும் இதில் இஸ்லாமியர்கள் மனம் புண்படும்படி எந்த காட்சிகளும் இல்லையென தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.