காரைக்கால்: காரைக்காலில், கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராட்சத திமிங்கலத்தை, மீனவர்கள் பல மணி நேரம் போராடி இழுத்து சென்று ஆழ்கடலில் விட்டனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த சில நாட்களாக சுறா, திமிங்கலம், டால்பின் போன்ற அரிய கடல் வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன.
இந்நிலையில், நேற்று காலை 7 மணி அளவில், வாஞ்சூர் தனியார் துறைமுகம் அருகில் கரை ஒதுங்கிய 80 அடி நீளம் உள்ள ராட்சத திமிங்கலம், மீண்டும் கடலுக்கு செல்ல முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
இதனை கண்ட அப்பகுதி மீனவர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன்வளத் துறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், திருப்பட்டினம், பட்டினச்சேரி கிராம மீனவர்கள் மற்றும் தனியார் துறைமுக ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோர், கரை ஒதுங்கிய திமிங்கலத்திற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் காலை 10 மணிக்கு ஈடுபட்டனர்.
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு, திமிங்கிலத்தை கயிற்றால் கட்டி, நான்கு விசை படகுகள் உதவியுடன் இழுத்து சென்றனர். ஆழ்கடல் பகுதியில் மாலை 4 மணிக்கு, திமிங்கிலத்தை விடுவித்தனர். ஆழ்கடலில் ஆனந்தமாக நீந்தி சென்ற திமிங்கிலத்தை கண்டு, மகிழ்ச்சியுடன் மீனவர்கள் கரை திரும்பினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement