புதுடில்லி: நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில், சமீபத்தில் ரயில்வே அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஒரு ரயில் நிலையம் ஒரே பொருள்’ திட்டத்தின் வாயிலாக, உள்ளூர் பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருவதால், இந்தத் திட்டம் ரயில் பயணியரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த 2022 – 23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், ரயில்வே அமைச்சகம் சார்பில் நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில், ‘ஒரு நிலையம் ஒரே பொருள்’ திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
உள்ளூர் பொருட்களின் தயாரிப்பை ஊக்கப்படுத்தும் இந்த திட்டம், கடந்த ஆண்டு மார்ச்சில் துவங்கி படிப்படியாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுதும் 21 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் உள்ள 728 ரயில் நிலையங்களில், மொத்தம் 785 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
உரிய நடவடிக்கை
இதன் முதற்கட்டமாக, நாட்டில் உள்ள 94 ரயில் நிலையங்களில், சிறு, குறு, உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்புகளை, இந்த விற்பனை நிலையங்களில் வைத்து விற்க அனுமதிக்கப்பட்டது.
இதையடுத்து, உள்ளூரில் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்கள், ஜவுளிகள், பாரம்பரிய ஆடைகள், விவசாயப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் என அந்தந்த பகுதிகளுக்கு தனித்து வமான பல்வேறு வகையான தயாரிப்புகள் இந்த விற்பனையகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பழங்குடியினரால் உருவாக்கப்பட்ட கலைப் பொருட்கள், நெசவாளர்களின் கைத்தறிகள், உலகப் புகழ் பெற்ற மரவேலைப்பாடு பொருட்களும், இந்த விற்பனை நிலையங்களை அலங்கரிக்கின்றன.
இதன்படி, தமிழகத்தின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளும், ஈரோடில் சென்னிமலை படுக்கை விரிப்புகளும், மதுரையில் சுங்குடி சேலைகளும், திருநெல்வேலியில் பனைமரப் பொருட்களும், தஞ்சாவூரில் பொம்மைகளும் விற்கப்படுகின்றன.
வடகிழக்கு மாநில ரயில் நிலையங்களில், பாரம்பரிய ராஜ்போங்ஷி ஆடைகள் மற்றும் சணல் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஜம்மு – காஷ்மீரில், காஷ்மீரி கிர்தா, காஷ்மீரி கஹ்வா மற்றும் உலர் பழங்கள் பிரபலமானவை.
தென்மாநிலங்களில் முந்திரி பொருட்கள், மசாலா பொருட்கள், கைத்தறி புடவைகள் போன்றவை பயணியரை கவர்ந்து வருகின்றன.
நாட்டின் மேற்குப் பகுதியில், எம்பிராய்டரி மற்றும் ஜரி ஜர்தோசி, தேங்காய் அல்வா உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை வசீகரித்துள்ளன. உள்ளூர் தயாரிப்புப் பொருட்கள் என்பதால், இவற்றை ரயில் பயணியர் அதிகளவில் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மார்ச்சில் துவங்கப்பட்ட இந்த திட்டத்தில், இதுவரை 25 ஆயிரத்து 109 பேர் பயனடைந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இனிதான பயணத்தை துவங்கும் ரயில் பயணியர், தங்கள் விருப்பமான பொருட்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு நிலையம், ஒரே பொருள் திட்டம், நாட்டில் உள்ள விளிம்புநிலை சமூக மக்களுக்கு வாழ்வளிக்கும் வகையில் அமைந்துஉள்ளது.
இந்த திட்டம், மேலும் பல பயனாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த, ரயில்வே அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
5 புதிய ‘வந்தே பாரத்’ ரயில்கள்
அதிவேகமாக இயங்கக்கூடிய வந்தே பாரத் ரயில்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் மேலும் ஐந்து புதிய ரயில்களை அறிமுகப்படுத்த ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதில், பூரி – ஹவுரா இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை இந்த வாரம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, வடகிழக்கு மாநிலங்களுக்கான முதல் வந்தே பாரத் ரயில் சேவையான புதிய ஜல்பைகுரி – குவஹாத்தி இடையிலான ரயில் அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். இதேபோல், பாட்னா – ராஞ்சி இடையிலான ரயில் சேவையும் துவக்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்