அசத்திய அமுதா ஐஏஎஸ் கணவர்… ஜஸ்ட் மிஸ்… கர்நாடகா தேர்தலில் ஆட்டம் கண்ட பாஜக!

அமுதா ஐஏஎஸ் (Amudha IAS) என்ற பெயர் தமிழகத்தில் மிகவும் பிரபலம். துடிப்பான அதிகாரி, மிகவும் நேர்மையாக செயல்படுபவர், முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது பெற்றவர், ஸ்டாலின் எடுத்த நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து தமிழகத்திற்கு திரும்பியவர், தற்போது உள்துறை செயலாளர் உள்ளிட்ட சிறப்புகளுக்கு உரியவர்.

யார் இந்த ஷம்பு கல்லோலிகர்

சமீபத்தில் தான் ஊரக வளர்ச்சி துறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் இவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளன. இதற்கிடையில் அமுதா ஐஏஎஸ் கணவர் ஷம்பு கல்லோலிகர் (Shambhu Kallolikar) கர்நாடகாவில் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார். இதன் பின்னணி குறித்து இங்கே பார்க்கலாம். ஷம்பு கல்லோலிகர் (59) விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.

ரைபாக் தொகுதி தேர்தல்

கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் உள்ள ரைபாக் அடுத்த யபரட்டி பகுதியை சேர்ந்தவர். தங்கள் ஊர் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் என்று பெரிதும் ஆர்வம் காட்டி வந்தார். ரைபாக் தொகுதியில் (Raibag) பாஜகவை சேர்ந்த துரியோதன் மகாலிங்கப்பா எம்.எல்.ஏவாக இருந்தார். இவர் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தாலும் பெரிதாக மாற்றங்கள் வரவில்லை எனச் சொல்லப்படுகிறது.

சீட் மறுத்த காங்கிரஸ்

இதை மாற்றிக் காட்ட தேர்தலில் நின்று அதிகாரத்திற்கு வர வேண்டும் என நினைத்தார். இதற்காக காங்கிரஸ் கட்சியிடம் சீட் கேட்டுள்ளார். ஏனெனில் இவர்களது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது. ஆனால் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை. உடனே ரைபாக் தொகுதியில் சுயேட்சையாக நிற்க முடிவு செய்தார். தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் என்ன?

கர்நாடகா தேர்தல் முடிவுகள்

தன்னால் என்ன செய்ய முடியும்? அடைய வேண்டிய முன்னேற்றங்கள் என்னென்ன? உள்ளிட்டவற்றை முன்வைத்து பிரச்சாரம் செய்துள்ளார். இவையெல்லாம் எப்படி வாக்குகளாக மாறும் என்று கேள்வி கேட்டவர்களுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியான நிலையில் ஷம்பு கல்லோலிகர் 54,930 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

பாஜக வேட்பாளர் வெற்றி

பாஜக வேட்பாளர் துரியோதன் மகாலிங்கப்பாவை (57,500) தோற்கடிக்க முடியவில்லை. அதேசமயம் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி ஆச்சரியப்படுத்தினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மட்டும் சீட் கொடுத்திருந்தால் ஷம்பு கல்லோலிகர் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இவரை பற்றிய செய்திகள் தான் இணையத்தில் தற்போது பெரிதும் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.