ஜெய்பூர்: பொதுவாக கிரிக்கெட் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்கும் வீரரை டக் அவுட் ஆனதாக கூறப்படும் நிலையில், டைமண்ட் டக் அவுட் என்றால் என்ன? நேற்றைய போட்டியில் அஸ்வின் ஆட்டமிழந்ததை ஏன் டைமண்ட் டக் அவுட் என அழைக்கிறார்கள் தெரியுமா? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்காக அனைத்து அணிகளும் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக கடுமையாக போட்டிபோட்டு வருகின்றன.
அந்த வகையில் தொடக்கத்தில் தொடர் வெற்றிகளை பெற்று முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது தொடர் தோல்விகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லவே தடுமாறி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. இந்த இலக்கை எதிர்நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் ஆரம்பக் கட்டத்திலிருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இறுதியாக அந்த அணி வெறும் 59 ரன்களில் ஆட்டமிழந்தது.
இந்த போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஷ் பட்லர், அஸ்வின், சந்தீப் ஷர்மா ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் ஆவுட் ஆகினர். இதில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ஒரு பந்தை கூட எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்தார். பேட்டிங் செய்ய இறங்கிய அஸ்வின், மறுமுனையில் நின்றுகொண்டிருந்தபோது ரன் எடுப்பதற்காக ஓடினார்.
அப்போது லாங் திசையில் இருந்த பெங்களூரு வீரர் முஹம்மது சிராஜ் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத்துக்கு வீசினார். அனுஜ் ராவத் அதை லாவகமாக பின் பக்கமாக ஸ்டம்புக்கு தள்ள, ஒரு பந்தை கூட பிடிக்காமல் அஸ்வின் டக் ஆனார். அஸ்வின் இவ்வாறு ஒரு பந்து கூட பிடிக்காமல் டக் அவுன் ஆனதைதான் டைமண்ட் டக் அவுட் என்கிறார்கள்.
பொதுவாக கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்கும் பேட்ஸ்மேனை டக் அவுட் ஆனதாக சொல்வது வழக்கம். இதேபோல் கிரிக்கெட்டில் 8 வகையான டக் அவுட்கள் உள்ளதாம். முதல் பந்திலேயே ஆட்டமிழக்கும் வீரரை கோல்டன் டக் என்று சொல்வதை நாம் கேட்டிருப்போம். அஸ்வின்போல் ஒரு பந்து கூட பிடிக்காமல் அவுட் ஆகும் வீரரை டைமண்ட் டக் என்கிறார்கள்.
2 வது பந்தில் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்கும் வீரரை சில்வர் டக் என சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் வீரர்கள் ஜெய்ஷ்வால், பட்லர் அவுட் ஆனதை சில்வர் டக் எனலாம். 3 வது பந்தில் ரன் ஏதுமின்றி ஆட்டமிழக்கும் வீரரை பிரான்ஜ் (வெண்கல) டக் அவுட் என்றும் அழைக்கின்றனர்.
அதேபோல் தொடக்க பேட்ஸ்மேன் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தால் அதை ராயல் டக் என்று அழைக்கிறார்கள். அதேபோல் இன்னிங்ஸ் இறுதியில் ரன் எடுக்காமல் ஆட்டமிழக்கும் வீரர் லாஃபிங் டக் என்று அழைப்பார்கள். டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தால் அதை பேர் டக் என்கிறர்கள். டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்சிலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தால் அதை பேர் டக் என்கிறர்கள்.