இலங்கையின் கடல் வளங்களை அழிக்கும் வகையில் இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடலில் மேற்கொண்டு வருகின்ற சட்டவிரோதமான இழுவைமடி வலைத் தொழிலை முற்றாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இதற்கு இழப்பீடுகள் எவையும் இந்தியப் படகுகளினால் ஏற்படுத்தப்படுகின்ற அழிவுகளுக்கு ஈடாக அமையாது என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
நேற்றுமுன்தினம் (13) சிலாபத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு, குறித்த பிரதேச கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறி எல்லை தாண்டிய சட்ட விரோத தொழில்முறை காரணமாக சிலாபம் புத்தளம் பிரதேச கடற்றொழிலாளர்கள் மாத்திரமன்றி வடக்கு மாகாணத்தை சேர்ந்த கடற்றொழிலாளர்களும் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருவதாகவும், அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தினார்.
அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்குவது தொடர்பாக சிலாபம் கடற்றொழிலாளர்களினால் வெளிப்படுத்தப்பட்ட சந்தேகத்தினை, முற்றாக மறுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமையில், குறித்த விஜயத்தின் போது கடற்றொழிலாளர் விவகாரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
சிலாபம் பகுதியில் வாழ்ந்து வருகின்ற சுமார் 15,000 கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான இந்த கலந்துரையாடலில், சிலாபம் மீன் சந்தையில் அமைக்கப்பட்டுள்ள சந்தை கட்டிடத்தில் வியாபார நடவடிக்கையை முன்னெடுத்தல், சிலாபம் துறைமுகத்தில் பொருத்தப்பட்டிருந்த வானொலி தொடர்பாடல் கருவியை பழுதுபார்த்து செயற்படுத்தல், பேர்ள் எக்ஸ்பிரஸ் நட்ட ஈட்டினை சிலாபம் கடற்றொழிலாளர்களுக்கும் கிடைக்கச் செய்தல், ஒயிலை குறைந்த விலையில் பெற்றுக் கொடுத்து கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் செலவை கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.