கர்நாடகாவில் வென்ற காங்கிரஸ்: நாடாளுமன்ற தேர்தலுக்கு `கை’கொடுக்குமா?!

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் தனது வெற்றியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வும், எப்படியாவது தோல்வியில் இருந்து வெளியில் வர காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருகிறது. இதற்கு நடப்பு ஆண்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான திட்டங்களை அவர்கள் வகுத்தனர். குறிப்பாக கடந்த ஜனவரியில் டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடந்தது.

ஜே.பி.நட்டா

அப்போது பேசிய அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “வரவிருக்கும் மாநிலத் தேர்தல்கள் 2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னோடி. மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஐந்து மாநிலங்களில் பாஜக தற்போது ஆட்சியில் இருக்கிறது. இரண்டு மாநிலங்களில் கூட்டணி மூலம் ஆட்சி செய்கிறோம்.

2023 ஒரு முக்கியமான ஆண்டு. ஏனெனில் இந்த ஆண்டில் ஒன்பது மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட வேண்டும். கட்சி ஒரு மாநிலத்தில்கூட தோல்வியடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்தத் தேர்தல்கள் 2024-ம் ஆண்டில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னோடியாக இருக்கும் என்பதால் அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் கட்சி வெற்றி பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே

2014 பொதுத் தேர்தல், 2019 பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றது. 2014-ல் 272 இடங்களைப் பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. இதுவே 2019-ல் எண்ணிக்கையை 303 ஆக உயர்த்தியது. 2024-ம் ஆண்டு தேர்தலில் இன்னும் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்” என்றார்.

இதேபோல் கடந்த பிப்ரவரியில் காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு நடந்தது. இதில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி சிறந்த தலைமையை வழங்கியது. தீர்க்கமான தலைமைக்கான ஒரே மாற்றாக அது மட்டுமே இருக்க முடியும். அப்போது இருந்ததுபோல், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் விரும்புகிறது” என்றார்.

பாரத் ஜோடோ யாத்திரை

மேலும் ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஒன்பது மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலில் முதலாவதாக திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் திரிபுராவில் பாஜக தனித்தும் மற்ற இரு மாநிலங்களில் அதன் கூட்டணி சார்பிலும் ஆட்சி அமைந்தன.

இதற்கிடையில் தான் கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக முனைப்பு காட்டியது. மோடி, அமித் ஷா ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கடந்த ஆண்டு இமாச்சல பிரதேச வெற்றிக்கு பிறகு கர்நாடகாவிலும் வெற்றி பெறவேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டது.

கர்நாடக தேர்தல்!

இந்த வெற்றியை பொறுத்தே வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையை மற்ற எதிர்க்கட்சிகள் ஏற்கும். இதனால் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகிய காந்தி, கார்கே உள்ளிட்டவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். குறிப்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சொந்த மாநிலம் என்பதால் அவரும் தீவிரம் காட்டினார்.

இந்நிலையில் தான் கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியானது. மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. இதன் மூலம் காங்கிரஸ் தனிப்பெருமமையுடன் ஆட்சி அமைப்பது உறுதியாகியிருக்கிறது. இது துவண்டிருந்த அந்த கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.

காங்கிரஸ்

மேலும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துவதில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. காங்கிரஸுடன் சேர இதுவரை எதிர்ப்பு தெரிவித்து வந்தவர்கள் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு வருகிறார்கள்.

தற்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகள் நிச்சயம் இதற்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

ப்ரியன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். “மாநில தேர்தலுக்கும், நாடாளுமன்ற தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. 2018 தேர்தலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்றது. 2019 தேர்தலில் இந்த மாநிலங்களில் பாஜக பெருவாரியான வெற்றியை பெற்றது. இதே வெற்றி தான் தொடரும் என்பதை சொல்ல முடியாது.

தேர்தல் நடக்கும் போது ஏற்படும் சூழ்நிலையை பொருத்து தான் முடிவு இருக்கும். 2019-ல் ஜிஎஸ்டி, கறுப்பு பணம் ஒழிப்பு போன்றவற்றினால் மோடி மீது மக்கள் அதிருப்தியில் இருந்தார்கள். அந்த நேரத்தில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தார்கள். தேச ஒற்றுமை, நாங்கள் தான் தேசத்தை பாதுகாக்கிறோம் என்று பிரசாரம் செய்தார்கள். அது அவர்களுக்கு வெற்றியை கொடுத்தது.

ராமர் கோவில்

காங்கிரஸ் தலைமையில் இணைய எதிர்க்கட்சிகள் தயங்க மாட்டார்கள். இதுவே நாடாளுமன்ற தேர்தலை கைகொடுக்கும் என நாம் உறுதியாக கூற முடியாது. காங்கிரஸ் தொண்டர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். பாஜகவை பொறுத்தவரை ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற முனைப்பு காட்டுவார்கள். நாடாளுமன்ற தேர்த்லுக்கு முன்பாக அயோத்தியில் ராமர் கோவில் திறப்பார்கள். இந்துத்துவா பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்துவார்கள்” என்றார்.

`கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றியானது அக்கட்சிக்கும் தொண்டர்களுக்கும் நம்பிக்கையை அளித்தாலும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்து!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.