கள்ளச்சாராய விவகாரம்.. ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. விழுப்புரம் எஸ்.பி சஸ்பெண்ட்

சென்னை: கள்ளச்சாராய மரணம் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு எஸ்.பி. பிரதீப்பும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் நேற்று முன்தினம் கள்ளச் சாராயம் குடித்த 40-க்கும் மேற்பட்டோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில், சங்கர், சுரேஷ், தரணிவேல், ராஜமூர்த்தி, மலர்விழி, மண்ணாங்கட்டி ஆகிய ஆறு பேர் நேற்று உயிரிழந்தனர். இந்நிலையில், முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழ்ந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் குடித்ததில் 12 பேர் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கள்ளச்சாராயம் குடித்து, முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். கள்ளச்சாராய மரணம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் 4 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இதையடுத்து அதிரடி நடவடிக்கையை முதல்வர் மு.க ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். அதாவது விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்குப் பிரிவு டி.எஸ்.பி-க்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு கூறியிருப்பதாவது:-

Spurious liquor death: Villupuram SP Srinatha suspend and Chengalpattu Sp Transferred

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செட்டியார் குப்பத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் மாவட்ட காவல்துறையும் அதன் ஒரு முக்கிய அங்கமான மதுவிலக்கு அமலாக்க பிரிவும் கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதில் எவ்விதமான சமரசத்திற்கும் இடம் அளிக்க கூடாது என்றும் கடுமையாக எச்சரித்தார்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களில் இந்த பிரிவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எத்தனால் போன்ற ரசாயனங்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

Spurious liquor death: Villupuram SP Srinatha suspend and Chengalpattu Sp Transferred

மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றும் காவலர்கள் தீவிர கவனத்துடனும் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத காவலர்கள் மீது உயர் அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிகழ்ந்த இந்த துயரமான சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் அதே சமயம் நிர்வாக ரீதியாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்.

இந்தப் பிரச்சனையின் மூல காரணங்களை கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழித்திடுவதற்கு ஏதுவாகவும், தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சில மூலப்பொருட்கள் கள்ளச் சாராயம் தயாரிக்கப்படும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுத்திடும் நோக்கத்துடனும், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடந்த கள்ளச்சாராய சம்பவம் குறித்த வழக்குகளின் விசாரணை CBCID-க்கு மாற்றப்படுகிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.