ஹைதராபாத்தில் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்கச் சென்ற இடத்தில், போலீஸாரிடம் கணக்கில் வராத ரூ.1.65 கோடி பணம் ரொக்கமாகச் சிக்கியிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.
முன்னதாக தனியார் நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாக பணியாற்றும் ஸ்ரீனிவாஸ் என்பவரின், ரெஜிமென்டல் பஜார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இது குறித்து கோபாலபுரம் போலீஸுக்கு தகவல் கிடைத்ததும், உடனடியாக தீயணைப்புதுறை போலீஸார் சம்பவ இடத்துக்கு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தரை தளத்தில் (ground floor) உள்ள பழைய மரச்சாமான்கள், குப்பைகள் மட்டுமே தீ விபத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து முதல் தளத்தில் பணம் இருப்பதாக தீ விபத்தைக் கண்காணித்து வந்த போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக போலீஸார் முதல் தளத்துக்குச் சென்று பார்த்தபோது, ரூ.1,64,46,000 ரொக்கம் உட்பட தங்கம் மற்றும் வெள்ளியாலான பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்றும் போலீஸாரால் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வருமான வரித்துறைக்கு தகவலளித்த போலீஸார், வருமான வரித்துறையினர் வந்ததும் விசாரணையைத் தொடங்கினர்.
அதோடு இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பிலிருந்து, `தனியார் நிறுவனம் ஒன்றில் DGM-ஆக பணிபுரியும், வீட்டின் உரிமையாளர் ஸ்ரீனிவாஸ் தற்போது வெளியூரில் இருப்பதாகவும், அவருக்கு அரசுடன் மின்சார ஒப்பந்தங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வீட்டில் யாரும் இல்லாதபோது இந்த சம்பவம் நடந்திருப்பதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இது ஒருவேளை நாடகமாக இருக்கலாம் என்று போலீஸாரின் சந்தேகத்துக்கு வழிவகுத்திருக்கிறது.