நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்- தயாராகும் அரசியல் கட்சிகள்

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. அதற்கு முன்பாக இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் ஆண்டு என்று சொல்லக்கூடிய வகையில் தொடர்ந்து பல மாநிலங்கள் அந்தத் தேர்தலை சந்திக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் திரிபுரா ( பிப்ரவரி 16), நாகலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்ளில் (பிப்ரவரி 27) சட்டசபை தேர்தல் நடந்தது. அதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கடந்த 10-ந் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. அடுத்த கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக நாடு 5 மாநில சட்டசபை தேர்தலைச் சந்திக்க உள்ளது. அந்த மாநிலங்கள் மிசோரம், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகும்.

முதல்-மந்திரி ஜோரம் தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிற மிசோரம் மாநிலத்தில் 40 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபையின் ஆயுள் டிசம்பர் 17-ந் தேதி முடிகிறது. முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிற சத்தீஷ்காரில், 90 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபையின் ஆயுள் ஜனவரி 3-ந் தேதி முடிகிறது.

முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற மத்திய பிரதேசத்தில் 230 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபையின் ஆயுள் காலம் ஜனவரி 6-ந் தேதி முடிகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற ராஜஸ்தானில் 200 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபையின் பதவிக்காலம் ஜனவரி 14-ந் தேதி முடிகிறது. முதல்-மந்திரி சந்திரசேகரராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடக்கிற தெலுங்கானாவில் 119 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபையின் ஆயுள் காலம் ஜனவரி 16-ந் தேதி முடிகிறது.

ஒரே நேரத்தில் தேர்தல்

கிட்டத்தட்ட ஒரே கால கட்டத்தில் மிசோரம், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் ஆயுள்காலமும் முடிவதால் அவற்றுக்கு ஒரே நேரத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது. காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இங்கும் தேர்தல் நடத்தப்படலாம். இங்கு குளிர் குறைவதைப் பொறுத்தும், பாதுகாப்பு நிலவரத்தைப் பொறுத்தும் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது.

எனவே அரசியல் கட்சிகள், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் மிசோரம், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளன. இந்த 5 மாநிலங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டம் போல அமையும் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தத் தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் தயாராக வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுடன்…

ஆந்திரா, அருணாசலபிரதேசம், ஒடிசா ஆகிய 3 மாநில சட்டசபைகளின் ஆயுள் காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடிகிறது. எனவே இந்த மாநிலங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.