பஜ்ரங் தளம் தடை வாக்குறுதி | மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன்

புதுடெல்லி: தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுடன், பஜ்ரங் தள் அமைப்பை இணைத்துப் பேசியது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரூ.100 கோடி அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் மாநில நீதிமன்றம் இன்று (திங்கள் கிழமை) நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பஜ்ரங் தள் இந்துஸ்தான் என்று அழைக்கப்படும் அமைப்பின் நிறுவனர் ஹிந்தேஷ் பரத்வாஜ் என்பவர் கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சங்ரூர் நீதிமன்றம் கார்கேவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. மனுதாரர் தனது மனுவில்,”சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதிகள் ஒன்றில், காங்கிரஸ் கட்சி பஜ்ரங் தள் அமைப்பினை சிமி மற்றும் அல்-கொய்தா போன்ற தடைசெய்யப்பட்ட சர்வதேச விரோத அமைப்புகளுடன் ஒப்பிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யப் போவதாக அக்கட்சித் தெரிவித்திருந்தது. தனது தேர்தல் வாக்குறுதிகளில், “மதம் மற்றும் சாதிகளின் அடிப்படையில் மக்களிடம் வெறுப்பு மற்றும் பிரிவினைகளை உண்டாக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது. சட்டமும் அரசியல் அமைப்பும் புனிதமானது; எல்லோருக்கும் பொதுவானது. அதனை தனிநபர்களோ, பஜ்ரங் தள், பிஎஃப்ஐ அல்லது சிறுபான்மையினர், பெரும்பான்மையினரிடம் பிரிவினை மற்றும் பகையை வளர்க்கும் எந்த அமைப்புகளும் மீறமுடியாது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இவ்வாறானவர்கள் மீது தடை உட்பட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருந்தது.

இந்தத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நாளன்று, மல்லேஸ்வரம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற பாஜக முன்னாள் அமைச்சர் சிஎன் அஸ்வத் நாராயணன், “அவர்களுக்கு எவ்வளவு தைரியமிருந்தால் பஜ்ரங் தள்-ஐ தடைசெய்வோம் எனத் தெரிவித்திருப்பார்கள், முடிந்தால் அவர்கள் முயற்சித்துப் பார்க்கட்டும். எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் காட்டுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இந்த விவகாரத்திற்கு எழுந்த எதிர்ப்பினைத் தொடர்ந்து,”பஜ்ரங் தள அமைப்பை தடை செய்யும் திட்டம் காங்கிரஸிடம் இல்லை. வெறுப்பை விதைக்கும் அமைப்புகளை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எங்களின் தேர்தல் அறிக்கையில் வெறுப்பு பிரச்சாரம் செய்யும் அமைப்புகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்க‌ளின் அடிப்படையிலே சிலவற்றை குறிப்பிட்டுள்ளோம். ஒரு கட்டத்தில் சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ், அமைப்பை தடை செய்தார். அதனை திரும்ப பெற்றது ஜவஹர்லால் நேரு தான் என்பதை பாஜகவுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்” என்று அக்கட்சி விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.