'பஜ்ரங் தள்' விவகாரம்; அவதூறு வழக்கில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பஞ்சாப் நீதிமன்றம் சம்மன்!

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலின் வாக்குறுதியாக, ‘பஜ்ரங் தள் அமைப்பைத் தடைசெய்வோம்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இதற்கு பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

மேலும், கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பைப் போன்று `பஜ்ரங் தள்’ அமைப்பை நிச்சயம் தடைசெய்வோம்’ எனக் கூறியிருந்தார். இந்த நிலையில், பஜ்ரங் தள் அமைப்பின் நிறுவனர் ஹிந்தேஷ் பரத்வாஜ், கார்கேவுக்கு எதிராக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்ட நீதிமன்றத்தில், 100 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்கு தாக்கல்செய்திருந்தார். இதைத் தொடர்ந்து சங்ரூர் நீதிமன்றம் கார்கேவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே

ஹித்தேஷ் பரத்வாஜ் அளித்த புகாரில், “அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தலில் அதன் தேர்தல் வாக்குறுதிகளில், காங்கிரஸ் கட்சி `பஜ்ரங் தள்’ அமைப்பை சிமி, அல்-கொய்தா போன்ற தடைசெய்யப்பட்ட சர்வதேச விரோத அமைப்புகளுடன் ஒப்பிட்டிருக்கிறது. அதோடு ‘பஜ்ரங் தள்’ எனக் குறிப்பிட்டு ‘பெரும்பான்மை, சிறுப்பான்மையின சமுதாயத்திடையே வெறுப்பை அல்லது பகையை ஊக்குவிக்கும் அமைப்புகளைத் தடைசெய்வதாக’ உறுதியளித்தது.

சமூகம் அல்லது மதம் சார்ந்து வெறுப்பைப் பரப்புகின்றோர் தனிநபரானாலும், அமைப்பானாலும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு சட்டம், அரசியலமைப்பு புனிதமானது, அதை மீறுகின்ற தனிநபர் அல்லது பஜ்ரங்க் தள், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளன்று, மல்லேஸ்வரம் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயணன், “அவர்களுக்கு எவ்வளவு தைரியமிருந்தால் பஜ்ரங் தள் அமைப்பைத் தடைசெய்வோம் எனத் தெரிவித்திருப்பார்கள், முடிந்தால் அவர்கள் முயன்று பார்க்கட்டும். எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நாங்கள் காட்டுவோம்” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி

இதற்கிடையில், இந்த விவகாரத்துக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், “பஜ்ரங் தள் அமைப்பைத் தடைசெய்யும் திட்டம் காங்கிரஸிடம் இல்லை. வெறுப்பை விதைக்கும் அமைப்புகளைத் தடைசெய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. எங்களின் தேர்தல் அறிக்கையில் வெறுப்பு பிரசாரம் செய்யும் அமைப்புகள் குறித்து, உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக‌ளின் அடிப்படையிலே சிலவற்றை குறிப்பிட்டோம்” என்றது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.